இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் பலியான உஷாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி; கமல்ஹாசன் வழங்கினார்


இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் பலியான உஷாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி; கமல்ஹாசன் வழங்கினார்
x
தினத்தந்தி 4 April 2018 11:00 PM GMT (Updated: 4 April 2018 9:21 PM GMT)

இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் பலியான உஷாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியை நடிகர் கமல்ஹாசன் வழங்கினார்.

திருச்சி,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் சூலமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 34). இவருடைய மனைவி உஷா. இவர்கள் கடந்த மாதம் 7-ந் தேதி தஞ்சையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு புறப்பட்டனர். துவாக்குடி சுங்கச்சாவடி அருகே வந்தபோது, அங்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். ஹெல்மெட் அணியாமல் சென்ற ராஜாவை அவர் தடுத்து நிறுத்தினார். அப்போது ராஜா நிற்காமல் சென்றதால் இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆத்திரம் அடைந்தார். உடனே அவர், ராஜாவை ஸ்கூட்டரில் விரட்டி சென்று மோட்டார் சைக்கிளில் எட்டி உதைத்தார்.

இதனால் ராஜாவும், உஷாவும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த உஷா சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் காமராஜை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு போராட்டங்களும் நடந்தன. இந்தநிலையில் இந்த சம்பவம் பற்றி அறிந்த மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் உஷாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

கமல்ஹாசன் நிதி உதவி

இந்த நிலையில் திருச்சியில் நேற்று நடந்த மக்கள் நீதிமய்யம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினமே கமல்ஹாசன் திருச்சி வந்தார். காஜாமலை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் தங்கி இருந்தார். நேற்று காலை உஷாவின் தாயாரை நேரில் வரவழைத்து அவருக்கு ஆறுதல் கூறியதோடு, ரூ.5 லட்சத்துக்கான காசோலையை கமல்ஹாசன் வழங்கினார். மீதம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை உஷாவின் கணவர் ராஜாவிடம் கமல்ஹாசன் வழங்க இருந்தார். ஆனால் நேற்று காலை இன்ஸ்பெக்டர் காமராஜ் ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணைக்காக ராஜா கோர்ட்டுக்கு சென்று இருந்தார். இதனால் அவரை நேற்று பகல் கமல்ஹாசன் தனியாக சந்தித்து ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். 

Next Story