காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெல்லை-தூத்துக்குடியில் ரெயில் மறியல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெல்லை-தூத்துக்குடியில் ரெயில் மறியல்
x
தினத்தந்தி 5 April 2018 4:00 AM IST (Updated: 5 April 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட 796 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் குருசாமி, பொதுக்குழு உறுப்பினர் அன்புமணி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. நகர செயலாளர் சங்கரன், ம.தி.மு.க. நகர செயலாளர் ஆறுமுகச்சாமி ஆகியோர் வரவேற்று பேசினர்.

போராட்டத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் செங்கோட்டை-மதுரை பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. அந்த ரெயில் முன்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரசாக், மாவட்ட அவை தலைவர் முத்துப்பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் லாலா என்ற சங்கரபாண்டியன், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன், கண்ணன், கணேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தங்கவேலு, அந்தோணி ராஜ், ம.தி.மு.க. சார்பில் நயினார் முகம்மது, பொன்னுச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பீர்மைதீன், சுந்தர், குட்டி வளவன் உள்பட 540 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன் தலைமையில் அந்த கட்சியினர் திரண்டனர். அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ரெயில்நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது மாநகர செயலாளர் நல்லதம்பி, பொருளாளர் கண்ணன் உள்பட 50 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி நெல்லையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த ரெயில் மறியல் போராட்டத்தையொட்டி நெல்லை உதவி போலீஸ் கமிஷனர் மாரிமுத்து, இன்ஸ்பெக்டர் வனசுந்தர் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாநிலக்குழு உறுப்பினர் வேலாயுதம், அம்பை ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அம்பை ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு வந்த பயணிகள் ரெயில் நேற்று காலை 11.35 மணியளவில் அம்பை வந்தது. அந்த ரெயில் முன்பு அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 48 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தையொட்டி, அம்பை ரெயில் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகிர் ஹூசைன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதாபன், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தென்காசியில் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திரண்டு வந்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் பி.எஸ்.எஸ்.போஸ் தலைமை தாங்கினார். கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, தென்காசி நகர செயலாளர் கணேசன், தாலுகா செயலாளர் அருணாச்சலம், செங்கோட்டை நகர செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 22 பெண்கள் உள்பட 63 பேரை தென்காசி ரெயில் நிலைய வாசலில் போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மேற்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில் தென்காசியில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். கடையநல்லூர் தொகுதி செயலாளர் சந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர் ராஜ், ஆலங்குளம் தொகுதி செயலாளர் தமிழ்குமார் உள்பட 12 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் திடீரென ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். வள்ளியூரில் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. மாநகர செயலாளர் ஞானசேகர் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் அழகு முன்னிலை வகித்தார். அப்போது மைசூருவில் இருந்து தூத்துக்குடி வந்த மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நின்று மறியல் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 25 பேரை தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் கைது செய்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கோவில்பட்டியில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் பாசஞ்சர் ரெயில், காலை 11.15 மணிக்கு கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு வந்தது. உடனே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஓடிச் சென்று, ரெயிலை மறித்தனர். மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், நகர செயலாளர் சரோஜா, அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் பாபு, மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், மாதர் சங்கம் கோமதி, மாவட்ட விவசாய சங்க தலைவர் நல்லையா, சங்கரப்பன், கொம்பையா, செந்தில் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரெயில் மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்ளிட்ட 47 பேரை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் ரெயில் சிறிதுநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11.10 மணிக்கு பாலக்காட்டுக்கு புறப்பட்டு செல்லும் பாசஞ்சர் ரெயிலை மறிப்பதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வந்தனர். அப்போது ரெயில் நிலைய வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரகுராஜன் (தாலுகா), ஷீஜாராணி (கோவில்) மற்றும் போலீசார், ரெயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் கரும்பன், ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ரெயில் மறியலில் ஈடுபட்டதாக தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட மொத்தம் 796 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story