வள்ளியூர் யூனியன் அலுவலகம் முன்பு பெண் சமையல் உதவியாளர் தீக்குளிக்க முயற்சி அதிகாரிகள்- போலீசார் சமரசம்


வள்ளியூர் யூனியன் அலுவலகம் முன்பு பெண் சமையல் உதவியாளர் தீக்குளிக்க முயற்சி அதிகாரிகள்- போலீசார் சமரசம்
x
தினத்தந்தி 5 April 2018 4:00 AM IST (Updated: 5 April 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூரில் யூனியன் அலுவலகம் முன்பு பெண் சமையல் உதவியாளர் ஒருவர் நேற்று தீக்குளிக்க முயற்சித்தார். அவரை அதிகாரிகள், போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள புதுமனை செட்டிகுளத்தை சேர்ந்தவர் செல்லையா. அவருடைய மனைவி செல்வி (வயது 47). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கூடத்தில் சமையல் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். அதே பள்ளிக்கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக விமலா, சமையலராக பாப்பா ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் செல்விக்கு, விமலா பணி நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த செல்வி, வள்ளியூர் யூனியன் அலுவலகம் முன்பு நேற்று தீக்குளிக்க போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் உஷார் அடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் மற்றும் போலீசார் நம்பியான்விளை அருகே நின்று கண்காணித்து கொண்டிருந்தனர்.

அப்போது யூனியன் அலுவலகம் அருகே வந்த ஒரு ஆட்டோவை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், ஆட்டோவில் வந்தவர் செல்வி என்பதும், 3 லிட்டர் மண்எண்ணெய் கேன், தீப்பெட்டி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அவரை வள்ளியூர் யூனியன் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லாததால் யூனியன் அலுவலக மேலாளர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள், போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பின்னர் அவருக்கு அறிவுரைகள் வழங்கி, போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story