குக்கரின் கதை
நாம் குக்கர் சமையலை சில பத்து ஆண்டுகளாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் குக்கர் 17-ம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.
பிரெஞ்சு மருத்துவரான டெனிஸ் பாபின், கெட்டியான இறைச்சி மற்றும் உணவுப் பொருளை வேக வைப்பதற்காக 1679-ல் ஒரு சாதனத்தை உருவாக்கினார். அவர் அந்த சாதனத்துக்கு ‘நியூ டைஜஸ்டர்’ என்று பெயரிட்டிருந்தார். இதை இப்போது பிரஸர் குக்கர் என்கிறோம். நீராவி அழுத்தத்தில் சமைக்கும் சாதனம் என்று இதை சொல்லலாம்.
ஆரம்பத்தில் காற்றுப்புகாத மூடியிட்டு, நீராவி வெளியேறாமல் பொருட்களை வேகமாக பக்குவம் செய்தது இந்த சாதனம். 120 டிகிரி சென்டிகிரேட்டில் பொருட்கள் சமைக்கப்பட்டதால் முந்தைய பக்குவத்தைவிட கால்பங்கு நேரத்திலேயே சமைக்க முடிந்தது.
இந்த கண்டுபிடிப்பால் பாபின், லண்டன் ராயல் சொசைட்டியில் அங்கத்தினராக சேர்த்துக் கொள்ளப் பட்டார். கண்டுபிடிப்பு பற்றி சிறு நூல் எழுதும்படி, அந்த அமைப்பினர் கூற, 1681-ல் ஒரு புத்தகம் எழுதினார். 1682-ல் அதை மெய்ப்பித்துக்காட்ட விஞ்ஞானிகள் மத்தியில் முதல் முறையாக சமைத்துக் காட்டினார் பாபின். அவர்கள் திருப்தியாக விருந்து சாப்பிட்டாலும், பாபினின் குக்கர் பிரபலமடையவில்லை. ஏனெனில் அதன் மூடி எளிதாக இயக்கும் வகையில் இருக்க வில்லை, கைப்பிடியும் கிடையாது.
1905 வரை குக்கர்கள் வெகுசிலரின் பயன்பாட்டிலேயே இருந்தது. அந்த ஆண்டில் அமெரிக்காவில் பிரஸ்டோ கம்பெனி இரும்பிற்குப் பதிலாக அலுமினியத்தில் செய்த குக்கர்களை தயாரித்து வெளியிட்டது. அது கொஞ்சம் பிரபலமடைந்தது. 1938-ல் சிகாகோவைச் சேர்ந்த ஆல்பிரட் விஸ்ச்சர் என்பவர், காற்றுப்புகாமல் மூடும் இரும்பு மூடி முறையை மாற்றி, தற்போது வழக்கத்திலுள்ள எளிதான பூட்டு முறையில் உருவாக்கப்பட்ட குக்கரையும், பிரஸ்ஸரை வெளிப்படுத்தும் விசில் மற்றும் கைப்பிடியையும் உருவாக்கினார். பயன்பாட்டிற்கு எளிமையாக இருந்தன இந்த குக்கர்கள். ஆனால் விஸ்ச்சர் தனது தயாரிப்புக்கு காப்புரிமம் வாங்கி வைத்திருந்ததால், உலகளாவிய பயன்பாட்டிற்கு வர தாமதமானது.
1954-ல் அவரது காப்புரிமம் முடிவுக்கு வந்ததும் பல்வேறு நிறுவனங்கள் குக்கர் தயாரிப்பில் இறங்கின. அதன்பிறகு குக்கர்கள் வேகமாக பிரபலமடைந்தன். குடும்ப பெண்களின் வேலைப் பளுவை குறைத்த பிரஸர் குக்கர்கள் இன்று உலகம் முழுக்க விருந்து படைத்துக் கொண்டிருக்கிறது.
Related Tags :
Next Story