காவிரி விவகாரத்தில் “அ.தி.மு.க.வின் நடிப்பு விரைவில் மக்களுக்கு தெரியவரும்” சுப.உதயகுமார் பேட்டி


காவிரி விவகாரத்தில் “அ.தி.மு.க.வின் நடிப்பு விரைவில் மக்களுக்கு தெரியவரும்” சுப.உதயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 6 April 2018 4:15 AM IST (Updated: 6 April 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க.வின் நடிப்பு விரைவில் மக்களுக்கு தெரியவரும் என்று பச்சை தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப.உதயகுமார் கூறினார்.

நாகர்கோவில்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குமரி மாவட்டத்திலும் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி பச்சை தமிழகம் கட்சி சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனர் சுப.உதயகுமார் பங்கேற்று பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய பா.ஜனதா அரசு அமல்படுத்தாமல் இருக்கிறது. கன்னட மக்களின் கண்களில் வெண்ணையையும், தமிழக மக்களின் கண்களில் சுண்ணாம்பையும் மத்திய அரசு வைத்து வருகிறது. நர்மதா, கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆகிய நதிகளுக்கு மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் காவிரிக்கு மட்டும் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நாடகமாடி வருகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இருந்திருந்தால் டெல்லி சென்று பிரதமர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க.வின் நடிப்பு விரைவில் மக்களுக்கு தெரியவரும்.

கூடங்குளம், கல்பாக்கம், கெயில், ஸ்டெர்லைட் மற்றும் குமரி சரக்கு பெட்டக துறைமுகம் போன்ற இயற்கையை அழிக்கும் அழிவு திட்டங்களை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் என்றால், மாநிலங்களுக்கிடையே பாரபட்சம் காட்டி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாட்டு ஒற்றுமையை கெடுப்பவர்களுக்கு பெயர் என்ன?.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story