மனிதநேய ஜனநாயக கட்சியினர் கடலில் இறங்க ஆர்ப்பாட்டம்


மனிதநேய ஜனநாயக கட்சியினர் கடலில் இறங்க ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2018 4:15 AM IST (Updated: 6 April 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும், அதற்கு அழுத்தம் கொடுக்க மறுக்கும் மாநில அரசை கண்டித்தும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் வடசென்னை மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாசர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று திருவொற்றியூர் ஓண்டிக்குப்பம் பகுதியில் கடல் வழியாக சென்று சென்னை துறைமுகத்தை முற்றுகையிட முயன்றனர்.

இதற்காக காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே இருந்து 3 பைபர் படகுகளில் மாநில செயலாளர் தைமியா உள்பட 20-க்கும் மேற்பட்டோர் ஓண்டிக்குப்பம் பகுதிக்கு வந்தனர். உடனே கரையில் இருந்தவர்கள் ஓடிச்சென்று படகில் ஏறி துறைமுகத்தை முற்றுகையிட செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு தயாராக இருந்த திருவொற்றியூர் உதவி கமிஷனர் ரகுராமன், இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் மற்றும் போலீசார் அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தி கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்காவிட்டால் வருகிற 10-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளை நடத்த விடமாட்டோம் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

பின்னர் போலீசார் அவர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக கரைக்கு அழைத்து வந்து வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை பாரிமுனை குறளகம் அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் மாநில தலைவர் தெகலான் பாகவி தலைமையில் பேரணியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புளியந்தோப்பு போலீஸ் நிலையம் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வடசென்னை மாவட்ட துணை செயலாளர் முன்னாகான் தலைமையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story