சென்னையை சேர்ந்த சமூக சேவகி தர்ணா


சென்னையை சேர்ந்த சமூக சேவகி தர்ணா
x
தினத்தந்தி 6 April 2018 4:15 AM IST (Updated: 6 April 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவில் சிலை மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதை கண்டித்து சென்னையை சேர்ந்த சமூக சேவகி பழனியில் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி,

பழனி முருகன் கோவிலில் நவபாஷாணத்தால் ஆன சிலை உள்ளது. இந்த நவபாஷாண சிலை சேதம் அடைந்ததாக எழுந்த புகாரையடுத்து அதற்கு மாற்றாக கடந்த 2004-ம் ஆண்டு ஐம்பொன்னால் முருகன் சிலை செய்யப்பட்டது. 200 கிலோவில் அமைக்கப்படவிருந்த இந்த சிலை 221 கிலோவில் இருந்தது. மேலும் இந்த சிலை 6 மாதத்தில் நிறம் மாறியது.

இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார்கள் அளித்தனர். இதையொட்டி கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட ஐம்பொன் சிலை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

ஐம்பொன் சிலை செய்ததில் மோசடி நடந்ததாக கூறப்பட்ட புகார் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கோவிலின் முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா, ஸ்தபதி முத்தையா ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். வழக்கு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பழனிக்கு வந்து விசாரணை நடத்தி சென்றார். தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த நந்தகுமார் மனைவியும் சமூக சேவகியுமான நர்மதா (வயது 39) நேற்று பழனிக்கு வந்தார். பின்னர் பழனி பாதவிநாயகர் கோவில் அருகே கையில் கோரிக்கை அட்டையை வைத்துக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவர் வைத்திருந்த அட்டையில் பழனி முருகன் சிலை செய்ததில் நடந்த மோசடி வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கூடாது. மீண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் வழக்கு விசாரணையை மேற்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து அவர் கூறுகையில், பழனி முருகன் சிலை மோசடி வழக்கை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விசாரித்தால் மட்டுமே உரிய தீர்வு கிடைக்கும், என்றார்.

Next Story