மத்திய அரசை கண்டித்து தபால் அலுவலகம்–பாஸ்போர்ட் அலுவலகம் முற்றுகை 192 பேர் கைது


மத்திய அரசை கண்டித்து தபால் அலுவலகம்–பாஸ்போர்ட் அலுவலகம் முற்றுகை 192 பேர் கைது
x
தினத்தந்தி 6 April 2018 4:15 AM IST (Updated: 6 April 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து திருச்சி தெப்பக்குளம் தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்ட 192 பேரை போலீசார் கைது செய்தனர்.

மலைக்கோட்டை,


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, திருச்சி தெப்பக்குளம் தபால் அலுவலகத்தை முற்றுகையிட நேற்று காலை மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பாபு தலைமையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ஜாபர், வர்த்தக சங்க தலைவர் அஹமது கபீர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரண்டு வந்தனர். அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடையை மீறி தபால் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனால் போலீசாருடன் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 88 பேரை போலீசார் கைது செய்து, வாகனத்தில் ஏற்றி ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச்சென்று தங்க வைத்தனர்.

சாலை மறியல்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திராவிடமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ந.பிரபாகரன் ஆகியோர் தலைமையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தரைக்கடை வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் நந்திகோவில் தெருவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, மரக்கடை அருகே உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து அவர்கள் மரக்கடை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 104 பேரை போலீசார் கைது செய்து, அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த இரு போராட்டங்கள் தொடர்பாக மொத்தம் 192 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story