கரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு பஸ்கள் வழக்கம் போல ஓடின


கரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு பஸ்கள் வழக்கம் போல ஓடின
x
தினத்தந்தி 5 April 2018 10:45 PM GMT (Updated: 5 April 2018 9:57 PM GMT)

மத்திய அரசை கண்டித்து கரூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால் பஸ்கள் வழக்கம் போல ஓடின.

கரூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் நேற்று தி.மு.க. தலைமையில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. மேலும் போராட்டத்திற்கு வணிகர் சங்க பேரவையினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். கரூர் மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கரூரில் ஜவகர் பஜார், கோவை சாலை, தாந்தோன்றிமலை கடை வீதி, வெங்கமேடு, பசுதிபாளையம் உள்ளிட்ட இடங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன. காலையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. கரூர் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகள் பெரும்பாலும் மூடியிருந்தன. பஸ் நிலைய வளாகத்தில் உள்ள மார்க்கெட் கடைகள் திறக்கப்படவில்லை. காமராஜர் மார்க்கெட்டில் ஒரு சில கடைகள் மட்டும் மூடியிருந்தன.

பஸ்கள் வழக்கம் போல ஓடின

தொ.மு.ச. உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. இருப்பினும் போக்குவரத்து அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்திருந்தனர். கரூர் திருமாநிலையூர், அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய பணிமனைகளில் இருந்து அரசு பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. கரூர் மண்டத்தில் 271 அரசு பஸ்களும் வழக்கம் போல இயக்கப்பட்டதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரூர் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் வழக்கம் போல புறப்பட்டு சென்றன. முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் இயங்கவில்லை. மினி பஸ்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் இயங்கியது. ஆட்டோ, சுற்றுலா வேன் ஆகியவை பாதிக்கு மேல் ஓடவில்லை.

தியேட்டர்களில் காட்சிகள் ரத்து

பெட்ரோல் பங்க்குகளில் நேற்று காலை 10 மணி வரை திறந்திருந்தது. அதன்பின் பெட்ரோல், டீசல் விற்பனை இல்லை என நிறுத்தி விட்டனர். மேலும் பங்க்குகள் முன்பு தடுப்புகள் அமைத்திருந்தனர். இதனால் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப வந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர். தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

பள்ளிகளுக்கு விடுமுறை

அரசு பள்ளிகள் வழக்கம் போல திறந்திருந்தன. ஒரு சில தனியார் பள்ளிகள் மட்டும் நேற்று காலையில் திடீரென விடுமுறை விட்டனர். இதனால் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற மாணவ- மாணவிகள் வீடு திரும்பினர்.

இதேபோல் வெள்ளியணை, ஜெகதாபி, மணவாடி, கே.பி.தாழைப்பட்டி பகுதிகளை சேர்ந்த வர்த்தகர்கள் தங்கள் கடைகளை அடைத்து இருந்தனர். குளித்தலை நகரப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் நேற்று காலை மூடப்பட்டிருந்தன. குளித்தலை பஸ்நிலையம், பெரியபாலம், சுங்கவாயில், பஜனை மடம் உள்ளிட்ட பகுதிகளில் சில டீ கடை, பெட்டிக்கடை, மளிகை மற்றும் ஜவுளி கடை, மெடிக்கல், ஓட்டல், பேக்கரி முதலியவை திறக்கப்பட்டிருந்தன.

வர்த்தகம் பாதிப்பு

இதன் பின்னர் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் சுற்றிவந்து திறந்திருந்த கடைகளை மூடச்சொல்லி வலியுறுத்தினர். இதையடுத்து திறக்கப்பட்டிருந்த கடைகளும் மூடப்பட்டன. குளித்தலை பகுதியில் கடையடைப்புக்கு பெரும்பாலான கடை உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து தங்கள் கடைகளை பூட்டியிருந்தனர். பஸ்கள் வழக்கம் போல் ஓடின இருப்பினும் பஸ்சில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் இல்லை.

இதேபோல் க.பரமத்தி, தென்னிலை, சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், தரகம்பட்டி, லாலாப்பேட்டை, வேலாயுதம்பாளையம், நொய்யல், உப்பிடமங்கலம், தோகைமலை, நச்சலூர், நங்கவரம், நெய்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த முழு அடைப்பு போராட்டத்தினால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை எதுவும் பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டிருந்தன. மாவட்டத்தில் 75 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மாலை 6 மணிக்கு மேல் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. கடையடைப்பால் கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிப்படைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.


Next Story