திருப்பரங்குன்றம், வாடிப்பட்டியில் ரெயில்களை மறித்து போராட்டம்


திருப்பரங்குன்றம், வாடிப்பட்டியில் ரெயில்களை மறித்து போராட்டம்
x
தினத்தந்தி 6 April 2018 4:00 AM IST (Updated: 6 April 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருப்பரங்குன்றம், வாடிப்பட்டியில் ரெயில்களை மறித்து போராட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பரங்குன்றம்,

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ணபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் முத்துராஜ், இந்திய கம்யூனிஸ்டு பகுதி செயலாளர் பிச்சைமணி, காங்கிரஸ் மாநில குழு உறுப்பினர் மகேந்திரன், ம.தி.மு.க. பகுதி செயலாளர் முருகேசன் விடுதலைசிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் பஸ் நிலையம் அருகே கட்சி கொடிகளுடன் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர்.

பின்னர் அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக புறப்பட்டு ரெயில் நிலையம் நோக்கி வந்தனர். அவர்களை ரெயில் நிலைய வளாகத்தில் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் போலீஸ் தடுப்பை கடந்து தண்டவாள பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் திருப்பரங்குன்றம் நோக்கி வந்த மைசூர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறித்தனர். மேலும் அவர்கள் ரெயில் முன் பகுதியில் ஏறி நின்று பிரதமருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அகற்றினர்.

இதைதொடர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்டவர்கள் திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் பூங்கா பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் மறியல் செய்த 8 பெண்கள் உள்பட 183 பேரை கைது செய்தனர்.

வாடிப்பட்டி ரெயில் நிலையத்தில் நாகர்கோவில்-மும்பை சென்ற ரெயிலை மறித்து போராட்டம் செய்த பேரூர் செயலாளர் பிரகாஷ், முன்னாள் பேரூர் செயலாளர் பால்பாண்டியன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன், காங்கிரஸ் வட்டார தலைவர் குருநாதன், விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகி கணபதி உள்பட 56 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story