வேலூர் மாவட்டத்தில் 20 அரசு பஸ், லாரி, ஆட்டோ கண்ணாடி உடைப்பு
முழு அடைப்பு போராட்டத்தின்போது 20–க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள், லாரி, ஆட்டோ கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி வேலூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையத்தில் இருந்து காலை முதல் தனியார் பஸ்கள் இயங்கவில்லை.காலையில் 10 சதவீத ஆட்டோக்கள் மட்டுமே இயங்கின. அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. காலையில் பணிமனைகளில் இருந்து பழைய, புதிய பஸ் நிலையங்களுக்கு வழக்கம்போல் பஸ்கள் சென்றன. பின்னர் அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டன. பஸ்களில் குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்தனர்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் தலைமையில் தி.மு.க.வினர் அண்ணாசாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டவுன் பஸ்களின் கண்ணாடிகளை ஊர்வலத்தில் வந்த சிலர் உடைத்தனர். இதையடுத்து டிரைவர்கள் உடனடியாக பஸ்சை அங்கிருந்து வெளியே எடுத்து சென்றனர். ஆனாலும் 7 டவுன் பஸ்களின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன.பழைய பஸ் நிலையம் அருகே வந்த ஒரு லாரியின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. மேலும் பழைய பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த 2 ஆட்டோக்களின் கண்ணாடி உடைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மற்ற ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
வேலூர் பழைய மீன்மார்க்கெட், கிரீன் சர்க்கிள், புதிய பைபாஸ் சாலை, தோட்டப்பாளையம் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதையடுத்து வேலூருக்கு வந்த பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பயணிகள் பஸ்சில் இருந்து உடனடியாக இறக்கி விடப்பட்டனர். பின்னர் பஸ்கள் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.பஸ் கண்ணாடி உடைப்பு காரணமாக டிரைவர்கள் வேலூர் புதிய பஸ்நிலையத்தில் வேறு பகுதிகளுக்கு பஸ்களை இயக்க டிரைவர்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் மதிய உணவு வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக்கழக நேர காப்பாளர் அறையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் திருப்பதியில் இருந்து வந்த அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடியை மர்மநபர்கள் அடைத்தனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். அதேபோல் காட்பாடி பகுதியில் பயணிகளை ஏற்றி சென்ற 2 ஆட்டோக்களின் முன்பக்க கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து பயணிகள் அங்கேயே இறக்கி விடப்பட்டனர். குடியாத்தம் அருகே ஆந்திராவில் இருந்து வேலூர் நோக்கி வந்த ஆந்திர அரசு பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டது.வேலூர் மாவட்டத்தில் ஆந்திர அரசு பஸ் உள்பட 20–க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள், லாரி, கார், ஆட்டோ கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக 6 பேரை கைது செய்து விசாரித்து வருவதாக போலீஸ் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தே.மு.தி.க. மாவட்ட செயலாளரின் கார் கண்ணாடி உடைப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தே.மு.தி.க.சார்பில் நாளை (சனிக்கிழமை) தே.மு.தி.க. சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது. வேலூர் மத்திய மாவட்ட தே.மு.தி.க. சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே போராட்டம் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டது. போராட்டத்தையொட்டி அப்பகுதியில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், கட்சி நிர்வாகிகளுடன் அண்ணா கலையரங்கம் அருகே நேற்று காலை ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீதர், தனது காரை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது கார் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்தனர். இதுதொடர்பாக அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.