ஈரோடு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் : ரெயில்-சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 1,863 பேர் கைது


ஈரோடு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் : ரெயில்-சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 1,863 பேர் கைது
x
தினத்தந்தி 6 April 2018 5:15 AM IST (Updated: 6 April 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,863 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் அமைதியாக நடந்தது. ரெயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,863 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும் தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிகள் நேற்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு (பந்த்) அழைப்பு விடுத்து இருந்தன. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்த அழைப்புக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், பல்வேறு வணிக சங்கங்களும், தொழிற்சங்கங்களும் ஆதரவு அளித்தன. அதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் அனைத்து முக்கிய நகர் பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஈரோடு மாநகர் பகுதியில் மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகள், நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆட்டோக்கள், கார்கள் அந்தந்த நிறுத்தங்களில் நிறுத்தப்பட்டு இருந்தன. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பயணிகள் நலன் கருதி சில ஆட்டோக்கள் இயக்கப்பட்டன.

போராட்டத்துக்கு வலுவூட்டும் வகையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவு இயக்கங்கள் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தினார்கள். ஈரோடு கனி மார்க்கெட், ஆர்.கே.வி. ரோடு, ஈஸ்வரன்கோவில் வீதி, டி.வி.எஸ். வீதி, மேட்டூர் ரோடு, பிரப் ரோடு, பெருந்துறை ரோடு, ஈ.வி.என். ரோடு, கே.என்.கே.ரோடு, சத்தி ரோடு, வீரப்பன்சத்திரம், காவிரி ரோடு, பூந்துறை ரோடு, கரூர் ரோடு, சென்னிமலை ரோடு, இடையன்காட்டு வலசு, சம்பத்நகர், நசியனூர் ரோடு, பி.பி.அக்ரஹாரம் உள்ளிட்ட மாநகரின் எந்த பகுதியிலும் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெங்கடாசலம் வீதி உள்பட சில பகுதிகளில் வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்ததுடன், கடைகளின் முன்பு கருப்புக்கொடிகள் ஏற்றி வைத்திருந்தனர்.

அரசு பஸ்கள் வழக்கம்போல இயங்கின. ஆங்காங்கே தி.மு.க. கூட்டணி கட்சியினர், முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவான இயக்கத்தினர் பஸ்களை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பஸ்கள் விடப்பட்டன. ஆனால் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் பெரும்பாலான மினிபஸ்கள் இயக்கப்படவில்லை.

ஈரோடு பஸ் நிலையம் சத்தி ரோடு நுழைவு வாயில் பகுதியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, தி.மு.க. பகுதி செயலாளர் பொ.ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு சம்பத்நகர் கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் கோர்ட்டுகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவு இயக்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. முன்னதாக ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே போலீசார் ரெயில் நிலையத்துக்கு செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். இதனால் போராட்டக்குழுவினர் அனைவரும் காளை மாடு சிலை பகுதியில் வந்து கூடினார்கள். மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்திக்கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் சுமார் 100 பேர் கொண்ட குழுவினர் போலீசாரின் பாதுகாப்பையும் மீறி வேறு வழியில் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தனர். அப்போது முதலாம் பிளாட்பாரத்தில் பாலக்காடு-திருச்சி பயணிகள் ரெயில் புறப்பட தயாராக நின்றது. போராட்டக்குழுவினர் ரெயிலின் முன் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். இதனால் ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுபோல் அங்கு புறப்பட தயாராக நின்ற சாலிமர் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்களையும் போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்தினார்கள். எதிர்பாராத இந்த மறியல் போராட்டத்தால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அனைவரையும் ஒரே இடத்தில் போராட்டம் நடத்தக்கேட்டுக்கொண்டனர். சுமார் 20 நிமிடங்கள் இந்த போராட்டம் நீடித்தது. போலீசாரின் வேண்டுகோளால் ரெயில் மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் காளை மாடு சிலை பகுதிக்கு சென்றனர்.

அங்கு காளை மாட்டு சிலையை சுற்றிலும் போராட்டக்குழுவினர் உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும் கொடிகளை கைகளில் ஏந்தி மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு இருந்தன. ஈரோட்டில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு பஸ் போராட்டம் காரணமாக சென்னிமலை ரோட்டில் நிறுத்தப்பட்டது. அப்போது பஸ்சில் இருந்து இறங்கி வந்த சிலர் அங்கிருந்த போலீசாரிடம் ஏன் பஸ்சை நிறுத்த அனுமதித்தீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே போராட்டக்குழுவினர் வந்து, இந்த போராட்டம் தமிழக மக்கள் அனைவருக்காகவும் நடக்கிறது. காவிரியில் தமிழர்களின் உரிமையை பெற நடக்கும் இந்த போராட்டத்துக்காக ஒரு மணி நேரம் உங்கள் பங்களிப்பை கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். உடனடியாக பயணிகள் அமைதி அடைந்து மீண்டும் பஸ்சில் சென்று உட்கார்ந்தனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மனித நேய மக்கள் கட்சியினர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு அரசு பஸ்சின் மீது ஏறி நின்று கோஷங்கள் எழுப்பினார்கள். உடனடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலரும் பஸ்சின் கூரையில் ஏறி நின்றனர். சுமார் 2 மணி நேரம் காளை மாடு சிலை பகுதியில் போராட்டம் நீடித்தது.

இந்த போராட்டங்களில் தி.மு.க. சார்பில் கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம், மாநகர செயலாளர் எம்.சுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஈ.பிரகாஷ், மாநகர அமைப்பாளர் கோட்டை ராமு, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் குமாரசாமி, காங்கிரஸ் கட்சி சார்பில் கே.என்.பாட்ஷா, முகமது அர்சத், திருச்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாரிமுத்து, சுப்பிரமணியன், திராவிடர் கழகம் சார்பில் த.சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நா.விநாயகமூர்த்தி, பாஸ்கர், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கொங்கு கோவிந்தராஜ், மனித நேய மக்கள் கட்சி சார்பில் அமீர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். காளைமாடு சிலை பகுதியில் 400 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் சென்னிமலை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதுபோல் கலெக்டர் அலுவலகம் முன்பு, வீரப்பம்பாளையம் பிரிவு உள்பட மாவட்டம் முழுவதும் 26 இடங்களில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டங்களில் மொத்தம் 123 பெண்கள் உள்பட 1,863 பேரை போலீசார் கைது செய்தனர். தி.மு.க. கூட்டணி கட்சியினர் 1,778 பேரும், திராவிடர் கழகத்தினர் 9 பேரும், நாம்தமிழர் கட்சியினர் 8 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 60 பேரும், வியாபாரிகள் சங்கத்தினர் 8 பேரும் அடங்குவர்.

முழு கடை அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவே ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாலாஜி சரவணன், சந்தனபாண்டியன் ஆகியோர் கொண்ட போலீஸ் அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். ஈரோடு மாநகர் பகுதியில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், போக்குவரத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ராஜகுமார், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். இதனால் முழு அடைப்பு போராட்டம் வேறு எந்த அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக நடந்தது.

Next Story