சாமுண்டீஸ்வரியில் களமிறங்குவது உறுதி பாதாமி தொகுதியிலும் சித்தராமையா போட்டி?


சாமுண்டீஸ்வரியில் களமிறங்குவது உறுதி பாதாமி தொகுதியிலும் சித்தராமையா போட்டி?
x
தினத்தந்தி 6 April 2018 5:24 AM IST (Updated: 6 April 2018 5:24 AM IST)
t-max-icont-min-icon

சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் வேட்பாளராக களமிறங்குவது உறுதியாகி உள்ள நிலையில், அவர் பாதாமி தொகுதியிலும் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தொகுதியை இந்த தேர்தலில் தனது அரசியல் வாரிசான மகன் டாக்டர் யதீந்திராவுக்கு விட்டுக் கொடுத்துள்ளார். இதனால் சித்தராமையா அதே மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.

சித்தராமையா அந்த தொகுதியில் 7 முறை போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றார். 2 தடவை தோல்வியை தழுவினார். இந்த முறை சாமுண்டீஸ்வரி தொகுதியில் தான் போட்டியிட உள்ளதாகவும், வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் கூறி இருக்கிறார். சமீபத்தில் அந்த தொகுதியில் சித்தராமையா 5 நாட்கள் பிரசாரம் செய்தார். கிராமம் கிராமமாக சென்று வாக்குகளை சேகரித்தார். அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததாக காங்கிரசார் கூறுகிறார்கள்.

சித்தராமையாவை வீழ்த்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதாவும், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளும் வரிந்து கட்டி கொண்டு வியூகங்கள் வகுத்து வருகின்றன. காங்கிரசின் பலம் வாய்ந்த தலைவராக திகழும் சித்தராமையாவை வீழ்த்திவிட்டால் அதுவே மிகப்பெரிய வெற்றியாக எதிர்க்கட்சிகளுக்கு அமைந்துவிடும். 150 தொகுதிகளில் வென்றாலும் மகிழ்ச்சி இருக்காது, சித்தராமையாவை தோற்பதில் தான் தங்களுக்கு மகிழ்ச்சியே என்று எடியூரப்பா ஏற்கனவே கூறி இருக்கிறார்.

இது சித்தராமையாவுக்கு கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். காரணம் இந்த முறையும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் சித்தராமையாவுக்கு தான் முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து சாமுண்டீஸ்வரி தொகுதியுடன் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியிலும் போட்டியிட சித்தராமையா ஆலோசித்து வருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தொகுதியில் தனது இனமான குருபா சமூக மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இதனால் அங்கு எளிதாக வெற்றி கனியை பறித்துவிட முடியும் என்று சித்தராமையா கருதுகிறார்.

இதுகுறித்து பெலகாவி மண்டல காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் மாணிக்தாகூர் கூறுகையில், “பாதாமி தொகுதியில் போட்டியிடுமாறு சித்தராமையாவுக்கு அந்த தொகுதி மக்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள். சாமுண்டீஸ்வரி தொகுதியில் அவரது வெற்றிக்கு எந்த தடையும் இல்லை. சித்தராமையா கர்நாடகத்தில் எந்த தொகுதியில் நின்றாலும் 1 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்“ என்றார். 

Next Story