ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கயத்தாறு,
கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பொது சுகாதார வருடாந்திர பராமரிப்பு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் செலவில் புதிதாக காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று காலையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு புதிய காம்பவுண்டு சுவரை திறந்து வைத்தார். பின்னர் அவர், கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குத்துவிளக்கு ஏற்றி, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 4 குழந்தைகளுக்கு அம்மா பரிசு பெட்டகங்களை வழங்கினார்.
தமிழகம் மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்று வருகிறது. ரஷிய நாட்டில் பிறந்த குழந்தைக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது. தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, தமிழக அரசை ரஷிய நாட்டினர் வெகுவாக பாராட்டி உள்ளனர். அதேபோன்று மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் தாய்சேய் நலத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை மூடினார். பின்னர் அந்த ஆலை நிர்வாகத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தனர். தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்காமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இதுதொடர்பாக முதல்-அமைச்சருடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியும், மாவட்ட நிர்வாகத்தின் கருத்துகளை பெற்றும், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
நிகழ்ச்சியில் கயத்தாறு தாசில்தார் முருகானந்தம், யூனியன் ஆணையாளர்கள் நாகராஜன், தங்கவேல், கடம்பூர் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கருப்பசாமி, முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் நாகராஜா, முன்னாள் நகர பஞ்சாயத்து துணை தலைவர் முருகேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், நகர பொருளாளர் வாசமுத்து, மாவட்ட பிரதிநிதி மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story