காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 April 2018 4:00 AM IST (Updated: 7 April 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நேற்று கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு மாணவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முற்போக்கு மாணவர் அமைப்பை சேர்ந்த பிரபாகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்கள் கூறிய தாவது:-

தமிழக விவசாயிகளும் பல்வேறு அமைப்பினரும் கடந்த பல ஆண்டுகளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது சுப்ரீம் கோர்ட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும், மத்திய அரசு அதனை அமைக்க நடவடிக்கை எடுக்காமல் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு கோர்ட்டுக்கு சென்றுள்ளது.

இது தமிழர்களை ஏமாற்றும் செயல். கர்நாடகா மாநில தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தால் சுங்க வரி சோதனை சாவடிகளை முற்றுகையிடுவது, மத்திய அரசுக்கு வரி கொடுக்காமல் போராட்டம் நடத்துவது, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவது உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம்.

மேலும் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கோவை ரேஸ்கோர்சில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட தலைவர் மலரவன் தலைமை தாங்கினார். தடையை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர். 
1 More update

Next Story