மறியல் போராட்டத்தின் போது அரசு பஸ் மீது கல்வீச்சு; 6 பேர் கைது


மறியல் போராட்டத்தின் போது அரசு பஸ் மீது கல்வீச்சு; 6 பேர் கைது
x
தினத்தந்தி 7 April 2018 3:00 AM IST (Updated: 7 April 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காரைக்குடியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அரசு பஸ் மீது கல்வீச்சு நடந்தது. இதுதொடர்பாக முன்னாள் நகர் மன்ற தலைவர் உள்பட 9பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.

காரைக்குடி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி காரைக்குடியில் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பஸ் மறியல் போராட்டம் மற்றும் கடைஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.

அப்போது அந்த வழியாக சென்ற 3 அரசு பஸ் மற்றும் 2 தனியார் பஸ்கள் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வீசி அதன் கண்ணாடியை உடைத்ததாக பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் சம்பவம் நடைபெற்ற இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தினர். அப்போது பஸ்களின் மீது கல்வீசி தாக்கியதாக தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் நகர் மன்ற தலைவர் முத்துதுரை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி மற்றும் சுந்தர், குணசேகரன், தி.மு.க தொழிற் சங்க நிர்வாகி மலையரசன், காரை சக்தி உள்பட 9 பேர் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் மலையரசன், சதாசிவம், கனி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர். 

Next Story