வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து தீர்ப்பு: மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யக்கோரி கோவையில் 10–ந்தேதி ஆர்ப்பாட்டம்


வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து தீர்ப்பு: மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யக்கோரி கோவையில் 10–ந்தேதி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2018 9:45 PM GMT (Updated: 6 April 2018 8:19 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் பற்றி தீர்ப்பு கூறியது. இந்த வழக்கில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யக்கோரி கோவையில் வருகிற 10–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மேம்படுத்துவதற்கான கூட்டமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

கோவை,

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மேம்படுத்துவற்கான கூட்டமைப்பின் கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சமூக நீதி கட்சி தலைவர் பன்னீர் செல்வம், தமிழ்நாடு திராவிடர் கழகத்தை சேர்ந்த நாகராசு, திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த நேருதாஸ், ஒருங்கிணைப்பாளர் குருசாமி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து அளித்த தீர்ப்பு, அந்த சட்டத்தையே நீர்த்து போக வைக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் தலித் மற்றும் பழங்குடியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா முழுவதும் பழங்குடியினர் மற்றும் தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் ஆணவக்கொலை செய்யப்படுகிறார்கள். எனவே இதுபோன்ற ஆணவக்கொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் குதிரை சவாரி செய்த தலித் இளைஞர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் 87 சதவீதம் கோர்ட்டுகளில் தேங்கி இருக்கிறது.

 கோர்ட்டுகளில் தேங்கி நிற்கும் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தற்போது சுப்ரீம் கோர்ட்டு அளித்திருக்கும் தீர்ப்பு தலித் மற்றும் பழங்குடி மக்களை பெரிதும் பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த தீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இதனை வலியுறுத்தி எங்களது கூட்டமைப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோவையில் வருகிற 10–ந்தேதியும், பொள்ளாச்சியில் 11–ந்தேதியும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story