தர்மபுரியில் பந்தல் அமைப்பாளர்கள் உண்ணாவிரத போராட்டம்


தர்மபுரியில் பந்தல் அமைப்பாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 6 April 2018 11:00 PM GMT (Updated: 6 April 2018 8:51 PM GMT)

தர்மபுரியில் பந்தல் அமைப்பாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தர்மபுரியில் பந்தல் அமைப்பாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தியும், தி.மு.க. கூட்டணி கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதன் ஒருபகுதியாக தர்மபுரி மாவட்ட ஒலி, ஒளி, பந்தல் மேடை அமைப்பாளர்கள் நல சங்கம் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், மாவட்ட தலைவருமான கமல்முனியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிட்டிபாபு, மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் மாதையன், மாவட்ட தொடர்பாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் அபிராமி மாது வரவேற்று பேசினார். உண்ணாவிரத போராட்டத்தை பகுத்தறிவாளர் கழக மாநில நிர்வாகி ஜெயராமன் தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில், டாக்டர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

அப்போது, காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக்குழுவை அமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த போராட்டத்தில் சங்க மாவட்ட துணைசெயலாளர் சங்கர் உள்பட சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பந்தல் அமைக்கும் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைசெயலாளர் சிட்டிசுரேஷ் நன்றி கூறினார்.

Next Story