திருமானூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்


திருமானூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 April 2018 10:45 PM GMT (Updated: 6 April 2018 9:42 PM GMT)

திருமானூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடு மற்றும் வீதிகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து மணல் குவாரி இயங்கி வந்ததாலும், எந்திரங்களை கொண்டு மணல் அள்ளியதாலும் அதிக ஆழத்தில் மணல் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் ஆழ்குழாய் கிணற்றிலும் தண்ணீர் இல்லை.

மேலும், கொள்ளிடம் ஆற்றில் இருந்து பல கிராமங்களுக்கு குடிநீருக்காக குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. டெல்டா பகுதியான திருமானூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாயம் செய்யப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கவலைக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வந்த மணல் குவாரி கடந்த சில மாதங் களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்தனர். ஆனால் திருமானூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கான பணிகளும் நடைபெற்றன.

திருமானூர் பகுதியில் மணல் குவாரி அமைத்தால் வரும் காலங்களில் மக்கள் குடிநீருக்கு அவதிப்படுவார்கள். எனவே இங்குள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பாக அனைத்து கட்சியினர், விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கொள்ளிடம் நீர் ஆதார பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது.

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த குழுவின் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று திருமானூர் ஒன்றியத்தில் செம்பியக்குடி, குலமாணிக்கம், திருமழபாடி, அரண்மனைக்குறிச்சி, அன்னிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர் உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். வீதிகளிலும் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.

மேலும் இன்று(சனிக் கிழமை) திருமானூரில் அனைத்து கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மணல் குவாரி அமைப்பதை அரசு தடுத்து நிறுத்தும் வரையில், மணல் குவாரி அமைப்பதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தவுள்ளதாக கொள்ளிட நீர் ஆதார பாதுகாப்பு குழு தெரிவித் துள்ளது.

Next Story