பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது முன்னாள் கவுன்சிலர் நாகராஜ், பினாயில் குடித்து தற்கொலை முயற்சி


பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது முன்னாள் கவுன்சிலர் நாகராஜ், பினாயில் குடித்து தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 6 April 2018 10:00 PM GMT (Updated: 6 April 2018 10:00 PM GMT)

பெங்களூருவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

பெங்களூரு,

 மந்திரி கே.ஜே.ஜார்ஜ், காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் மீது அவர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு ஸ்ரீராமபுரம் அனுமந்தநகரில் வசித்து வருபவர் நாகராஜ். இவர், பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார். அவருடைய வீட்டில் கடந்த ஆண்டு (2017) ஏப்ரல் மாதம் போலீசார் சோதனை நடத்தியபோது ரூ.14¾ கோடிக்கு தடை செய்யப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் தமிழ்நாட்டில் தலைமறைவாக இருந்த நாகராஜ், அவரது மகன்கள் காந்தி, சாஸ்திரி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். பின்னர் 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

பின்னர் கடந்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி சொத்து பிரச்சினை காரணமாக நாகராஜிக்கும், அவரது சகோதரர் தர்மனுக்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது தர்மனின் மனைவிக்கு நாகராஜ், அவரது 2 மகன்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஸ்ரீராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜ், அவரது 2 மகன்களையும் கைது செய்தார்கள். அந்த வழக்கிலும் 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தார்கள்.

இந்த நிலையில், பெங்களூரு பிரஸ் கிளப்பில் முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் நேற்று மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “நான் அரசியலில் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக மந்திரி கே.ஜே.ஜார்ஜ், காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்கள். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காந்திநகர் தொகுதியில் நான் போட்டியிடக் கூடாது என்பதற்காக 2 பேரும், அவர்களது ஆதரவாளர்கள் மூலம் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.

அவர்களால் நான் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளேன். என்னுடைய சாவுக்கு மந்திரி கே.ஜே.ஜார்ஜ், தினேஷ் குண்டுராவ் ஆகியோர் தான் காரணம். அவர்களால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்“ என்றார்.

இவ்வாறு அவர்கள் 2 பேர் மீதும் குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டிருந்த நாகராஜ் திடீரென்று தான் வைத்திருந்த ஒரு சிறிய பாட்டிலை திறந்து திடீரென்று குடித்தார். இதனால் அவர் அந்த இடத்திலேயே துடிதுடித்தார். இதை பார்த்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். பின்னர் நாகராஜை மீட்டு அங்கிருந்து ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. அதே நேரத்தில் நாகராஜின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். என்றாலும், தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பிரஸ் கிளப் மற்றும் ஆஸ்பத்திரிக்கு சென்று கப்பன் பார்க் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் மந்திரி கே.ஜே.ஜார்ஜ், தினேஷ் குண்டுராவ் மீது கூறும் குற்றச்சாட்டு குறித்து, நாகராஜ் குணமடைந்ததும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பத்திரிகையாளர் சந்திப்பின் போது முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story