பெரம்பலூரில் பரபரப்பு: கூட்டுறவுத்துறை அலுவலகம் முன்பு படுத்து விவசாய சங்க பிரதிநிதிகள் போராட்டம்
பெரம்பலூரில் கூட்டுறவுத்துறை அலுவலகம் முன்பு படுத்து, விவசாய சங்க பிரதிநிதிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தலில் வேட்பு மனு பரிசீலனை செய்யாமல் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக தேர்வு செய்து பெயர் விவரத்தை அதிகாரிகள் வெளியிட்டதாக கூறி சமீபத்தில் தி.மு.க.வினர் அந்த கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அந்த கூட்டுறவு வங்கி தேர்தலில் மனுத்தாக்கல் செய்து ஒப்புகை சீட்டினை பெற்ற, வேப்பந்தட்டை வட்டம் அகரம் கிராமத்தை சேர்ந்தவரும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளருமான ஏ.கே.ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் சாமிதுரை ஆகியோர் கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு குறித்து புகார் அளிப்பதற்காக பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.
அப்போது அங்கிருந்த பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், தங்களை பார்க்க மறுப்பதாகவும், மாறாக ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்ததாகவும், அவர்கள் குற்றம் சாட்டினர். பின்னர் கூட்டுறவுத்துறை அலுவலக நுழைவு வாயில் படிக்கட்டில் அந்த 2 பேரும் படுத்து தூங்கும் போராட்டம் நடத்தினர். அப்போது கூட்டுறவுத்துறை அதிகாரிகளை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானம் செய்தனர்.
இதற்கிடையே கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவரும் வெளியே வந்து விவசாய சங்க பிரதிநிதிகளை சமாதானம் செய்து, அவர்களது புகார் மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வி.களத்தூர் கூட்டுறவு வங்கி தேர்தல் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் அடுத்தகட்டமாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story