பதனீரில் இருந்து தயாரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை
பூலோகத்தின் “கற்பக விருட்சம்” என்று போற்றிப் புகழப்படும் பனை மரங்களை, தற்போது கண்டுகொள்வாரும் இல்லை. கவனிப்பாரும் இல்லை என்றாகிவிட்டது.
ஏதோ விரல்விட்டு எண்ணும் அளவுக்கு ஒருசிலர் பனை மரங்களின் பாதுகாப்புப் பற்றி, பேசிக் கொண்டிருக்கிறார்கள்; எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
பனை மரங்களில் இருந்து பதனீர், பனங்காய், பனம்பழம், பனங்கொட்டை, பனங்கிழங்கு, நுங்கு, பதநீரில் இருந்து கிடைக்கும் கருப்புக்கட்டி என்னும் கருப்பட்டி, வெள்ளைக் கருப்பட்டி, கற்கண்டு உள்ளிட்ட உணவு பொருட்களையும், பனை மர ஓலையில் செய்யப்படும் கலைநயமிக்க, வேலைப்பாடுகள் நிறைந்த உபயோகப்பொருட்கள் என பல அம்சங்களை தன்னுள் அடக்கி வைத்திருப்பதால் தான், பனை மரத்தை ‘கற்பகவிருட்சம்’ என்கிறோம்.
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீரில் இருந்து வெள்ளை சர்க்கரை (சீனி) தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக ஒரு ஆலையையே ஆங்கிலேய அரசு தமிழகத்தின் தென்மாவட்டத்தில் நிறுவியிருந்திருக்கிறது என்பது பலரும் அறியாத ஒரு விஷயமாகத்தான் இருக்கும். ஏனென்றால் இன்று வரை வெள்ளை சர்க்கரையானது, கரும்பில் இருந்து பல ரசாயனங்களைச் சேர்த்து மட்டுமே தயாரிக்கப்படுவதாக நினைத்துக்கொண்டிருக்கும் நமக்கு, இந்த விஷயம் முற்றிலும் புதுமையே.
அந்த புதுமையைப் பற்றிதான் இங்கே பார்க்கப்போகிறோம்.
1900-ம் ஆண்டு... ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இந்திய நாடு இருந்த காலகட்டம். தென்மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதியில், மக்கள் தொகையைவிட பசுமை படர்ந்த பனைமரத்தின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது. அதனால் நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகள் ‘பனங்காடு’ என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டு வந்தது.
தோப்புதோப்பாக பனைமரம். அதிலிருந்து இறக்கப்படும் பதனீர், பதனீரில் இருந்து கிடைக்கும் கருப்புக்கட்டி, வெள்ளைக்கருப்பட்டி, கற்கண்டு மற்றும் பனங்காய், பனம்பழம், நுங்கு, பனங்கொட்டை, பனங்கிழங்கு, சாரஓலை, குருத்தோலை, காவோலை, காவோலையின் குளிர்ச்சிமிக்க சிறப்புகள், குருத்தோலையின் அற்புதமான கலைநயமிக்க வேலைப்பாடுகள், பனைநார், பனைநாரின் விசேஷமான உபயோகங்கள் என்று அத்தனை அம்சங்களும் ஆங்கிலேயர்களை வசீகரித்தன. இதில் ஆங்கிலேயர்களை மிகவும் கவர்ந்த அம்சம், நம்மவர்கள் தயாரித்த கருப்புக்கட்டி என்னும் கருப்பட்டிதான்.
இந்த கருப்புக்கட்டி தயாரிக்கும் முறையை மேம்படுத்தினால் என்ன? என்று அவர்களுக்குத் தோன்றியது. பதனீரை பீப்பாய்களில் அடைத்து கப்பல்கள் மூலம் இங்கிலாந்திற்கு கொண்டுபோனார்கள். அதனை அங்குள்ள பெரிய பரிசோதனைச் சாலைகளில் வைத்து ஆராய்ச்சி செய்தார்கள். அந்த ஆராய்ச்சியின் வாயிலாக பதனீரில் இருந்து வெள்ளை சர்க்கரை (சீனி) தயாரித்து சாதனை படைத்தனர்.
சீனி தயாரிப்பதற்கு கரும்பு ஒன்றையே நம்பிக்கொண்டிருந்த நீண்ட நெடிய பாரம்பரியத்தை புரட்டிப்போட்ட அவர்கள், பனைப் பயிரில் புதுப் புரட்சி செய்ய அரும்பெரும் காரியங்களை அமல்படுத்தத் தொடங்கினார்கள். அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) கடைக்கோடி தென்பகுதியில், மிக அதிக அளவில் பனைமரங்கள் காணப்பட்டதால், அந்தப் பகுதியில் ஒரு சர்க்கரை தொழிற்சாலையை (சுகர் பேக்டரி) நிறுவ முடிவுசெய்தனர்.
அதன்படி 1915-ம் ஆண்டு குலசேகரன்பட்டினம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊரில், சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் மிக பிரமாண்டமான சர்க்கரை ஆலை நிறுவப்பட்டது. அது ‘சீனிஆலை’ என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வந்தது. நிபுணர்கள், அதிகாரிகள் என்று சில ஆங்கிலேயர்களைத் தவிர, சுமார் 400-க்கும் மேற்பட்ட அந்தப் பகுதி தமிழர்கள் அந்த சர்க்கரை ஆலையில் பணியமர்த்தப்பட்டனர்.
சர்க்கரை ஆலையைச் சுற்றி, சுமார் 15 முதல் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு அடர்த்தியான பனங் காடுகளாகவும், அவற்றுக்கு இடையிடையே சிறுசிறு கிராமங்களுமாக அங்கு பெரும்பகுதி அமைந்திருந்தது. பனைமரங்களில் ஏறி, பதனீர் இறக்கி அந்தப் பதனீரை சர்க்கரை ஆலைக்கு எடுத்துவருவது என்பது, சாலைவசதியும் போக்குவரத்து வசதியும் இல்லாத அந்த காலகட்டத்தில் மிகக்கடினமான பிரச்சினையாகவும், சிக்கலான சவாலாகவும் குறுக்கே நின்றது.
ஆனால் அந்த சவாலை ஆங்கிலேயர்கள், மிகச் சிறப்பான திட்டங்களின் மூலமாக வெற்றிகண்டார்கள். அடர்த்தியான பனைமர தோப்புகளை ஒட்டியுள்ள ஊர்களின் வழியாக ‘டிரக்’ என்ற புகைவண்டியை விட்டார்கள். பனங்காடுகளை ஊடுருவிச் சுற்றிவந்த இந்த டிரக், ஆங்காங்கு உள்ள நிறுத்தங்களில் நிற்கும். அப்போது அந்தப்பகுதியில் சேகரிக்கப்பட்ட பதனீரை வாங்கி, தகர டப்பாக்களில் நிரப்பி டிரக் வண்டியில் ஏற்றி சர்க்கரை ஆலைக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள்.
டிரக் வண்டி விடுவதற்கு சாத்தியமில்லாத பகுதிகளும் நிறைய இருந்தது. அந்த பிரச்சினையை சமாளிப்பதற்கு பூமிக்கு அடியில் வெண்கல உலோகத்தாலான குழாய்களைப் பதித்து, ஆங்காங்கு படிக்கட்டுகளுடன் கூடிய உயரமான “புனல்” அமைத்தார்கள். அந்தப் புனலில் பதனீரை ஊற்றினால் அது பல கிலோமீட்டர் தூரத்திற்கு பயணித்து சர்க்கரை ஆலைக்கு வந்து சேரும்படி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கான அனைத்து பொருட்களும், கருவிகளும் இங்கிலாந்தில் இருந்து கப்பல்கள் மூலம் குலசேகரன்பட்டினம் துறைமுகம் வழியாக கொண்டுவரப்பட்டது.
சர்க்கரை ஆலையில் பணியாற்றியவர்களுக்கு, எந்த வாகனவசதியும் சாலை வசதியும் இல்லாததை கருத்தில் கொண்டு, சீனி ஆலையையொட்டி தெற்குப்பகுதியிலும் வடக்குப் பகுதியிலும் காலனிகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. சீனி ஆலையில் பணிபுரிந்த நிலையில் இறந்துபோன உயரதிகாரிகளின் சடலத்தை, அங்கு ஒரு கல்லறைத் தோட்டம் அமைத்து அடக்கம் செய்தனர். அவர்களைப் பற்றிய குறிப்பு களையும் அதில் எழுதிவைத்தார்கள்.
இப்படியான வசதிகளால், சீனி ஆலை வெகு சிறப்பாக இயங்கி வந்தது. பனைமரத்தின் பயன்கள் மேம்பாடடைந்து, குலசேகரன்பட்டினத்தின் தென்பகுதியில் காணப்பட்ட பல மைதானங்களில் தினசரி மார்க்கெட் போன்று பனைபொருள் சந்தைகள் தோன்றின. பனை ஓலையில் ‘கூடு’ என்று, ஒரு பை போன்ற பொருளை அங்குள்ள மக்கள் தயாரித்தனர். குலசேகரன் பட்டினம் பண்டகசாலைகள் மூலம் அவை கொள்முதல் செய்யப்பட்டு, இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்தத் தொழில் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பளித்தது.
பனைமரத்தின் குருத்தோலையில் கண்ணைக்கவரும் வண்ணங்களை ஏற்றி, கருத்தைக் கவரும் விதமான கூடைகள், தொப்பிகள், கின்னிப்பெட்டிகள், பிலாபெட்டிகள், பொம்மைகள் என்று தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதற்காக குலசேகரன்பட்டினத்தை அடுத்த மணப்பாடு என்ற ஊரில், பனைஓலை ‘சொசைட்டி’ அமைக்கப்பட்டு உற்பத்திப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இப்படிப்பட்ட தொழில்கள் எல்லாமே, சீனி ஆலையின் பயனாக அதன் மறைமுகத் தொழிலாக உருவானதுதான்.
பனைமரங்களில் இருந்து பதனீர் இறக்கும் பணியை எளிதாக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். எனவே அதிநவீன இயந்திரங்களை கண்டுபிடிப்பது, மரபணு திருத்தங்கள் மூலம் மிகச்சிறிய பனை மரங்களை உருவாக்கி அதிக பலன் பெறும் திட்டம் என ஆராய்ச்சிகள் இங்கிலாந்து பரிசோதனைச் சாலைகளில் அன்றாடப் பணிகளாக நடந்து வந்தது. இப்படிப்பட்ட செவினங்கனைச் சமாளிப்பதற்காக, சீனி ஆலையில் உற்பத்தியாகிக் கொண்டிருந்த சீனியை, அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது. அவர்கள் நிர்ணயிக்கும் அதிக விலைக்கு வாங்க இங்கிலாந்து நாட்டு மக்கள் தயாராக இருந்தார்கள். ஏனெனில் வழக்கமான கரும்புச்சாறில் ரசாயனப்பொருட்களைச் சேர்த்து வெள்ளைச் சர்க்கரை தயாரிப்பதற்கு பதிலாக, மூலப்பொருளையே முழுமையாக மாற்றி பதனீரில் இருந்து நேரடியாக தயாரிக்கப்பட்ட சர்க்கரை என்பதால் அதை இங்கிலாந்து மக்கள் பெரிதும் விரும்பினார்கள்.
ஆனால் தமிழ் மக்களால்தான் சீனியை அதிக விலை கொடுத்து வாங்க முடியவில்லை. அதை அவர்கள் விரும்பவும் இல்லை. இதுபற்றி வெள்ளைக்காரர்களுக்கு கொஞ்சமும் கவலை இல்லை. ஏற்றுமதி விற்பனை பெருகி இருந்ததால், சீனி உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் அவர்கள் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். இந்த நிலையில்தான் பேரிடி ஒன்று விழுந்தது.
1940-ம் ஆண்டுகளில் சுதந்திரப்போராட்டம் தீவிரமடைந்த தருணத்தில், ஆங்கிலேயர்கள் நிறுவிய இந்த சர்க்கரை ஆலைக்கு எதிரான போராட்டமும் வலுத்தது. பதனீர் கொண்டு செல்ல அமைக்கப்பட்ட வெண்கல உலோக குழாய் உடைப்பு, ஆங்கிலேயர்களுக்கு யாரும் பதனீர் கொடுக்கக்கூடாது என்ற போராட்டம் உள்ளிட்டவை காரணமாக வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டிய அந்த சர்க்கரை ஆலை 1946-ம் ஆண்டு இழுத்து மூடப்பட்டது.
ஆனால் சீனி ஆலையை உருவாக்குவதில் அரும்பாடுபட்ட சில ஆங்கிலேய அதிகாரிகள், தாங்கள் அமைத்த காலனியில் இருந்து வெளியேற மனமின்றி, அங்கேயே வாழ்ந்து மாண்டு மறைந்தார்கள். அந்த சோகத்தைச் சொல்வதற்கென்றோ என்னவோ, அவர்களின் கல்லறை தோட்டம் மட்டும் முட்புதர்கள் சூழ காட்சி தருகின்றன.
அந்தக் காலத்தில் பதனீருக்காக மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான தென் தமிழர்களுக்கு போக்குவரத்து வசதியாகவும் அமைந்திருந்த சீனி ஆலை டிரக் வண்டியின் புகைமூச்சும்கூட அத்தோடு நின்றுபோனது. தகதகவென கனல் கக்கி காட்சி தந்த அதன் நிலக்கரி குவியலின் சிதறல்கள் மட்டும் இன்றளவும் குலசேகரன்பட்டினத்தின் கடலோர காட்சிகளாய், சீனி ஆலைக்கும்.. டிரக் வண்டி செயல்பட்டதற்கும் சாட்சியம் அளித்துக் கிடக்கின்றன.
குலசை எம்.புதியவன்
Related Tags :
Next Story