உயர்கல்வி படிக்க 6 கி.மீ. நடந்து செல்லும் மாணவ, மாணவிகள்


உயர்கல்வி படிக்க 6 கி.மீ. நடந்து செல்லும் மாணவ, மாணவிகள்
x
தினத்தந்தி 8 April 2018 3:15 AM IST (Updated: 8 April 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

உயர்கல்வி படிப்பதற்காக மாணவ-மாணவிகள் 6.கி.மீ. நடந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

செந்துறை,

நத்தம் தாலுகா செந்துறை அருகே மாமரத்துப்பட்டியில் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். 8-ம் வகுப்பை முடித்து வெளிவரும் மாணவ, மாணவிகள் உயர்கல்விக்காக 6 கி.மீ. தூரம் உள்ள செந்துறை மேல்நிலைப்பள்ளிக்கு சென்றே படித்து வருகின்றனர்.

ஆனால் செந்துறைக்கு செல்வதற்கு மாமரத்துப்பட்டியில் இருந்து பஸ் வசதி கிடையாது. இதனால் மாணவ, மாணவிகள் 6 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இல்லையெனில் அந்த வழியாக வரும் சரக்கு வாகனங்களில் ஏறி செல்கின்றனர். இது விபத்துக்கு வழிவகுக்கும் என்றபோதிலும் வேறு வழியின்றி மாணவ, மாணவிகள் சரக்கு வாகனங்களில் ஏறி செல்கின்றனர்.

நடந்து சென்று படிக்க விரும்பாத மாணவர்கள் சிலர் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதையொட்டி மாமரத்துப்பட்டியில் உள்ள நடுநிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லையில் உள்ள மலைப்பகுதி கிராமமான மாமரத்துப்பட்டியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நிலங்களை கொடுத்து உதவி செய்ய ஊர் மக்கள் தயாராக இருக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story