காவிரி பிரச்சினையில் தமிழக மக்களை எதிர்க்கட்சியினர் திசை திருப்புகிறார்கள் - எச்.ராஜா குற்றச்சாட்டு


காவிரி பிரச்சினையில் தமிழக மக்களை எதிர்க்கட்சியினர் திசை திருப்புகிறார்கள் - எச்.ராஜா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 April 2018 4:15 AM IST (Updated: 8 April 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

காவிரி பிரச்சினையில் தமிழக மக்களை எதிர்க்கட்சியினர் திசை திருப்புகிறார்கள் என்று குன்னூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.

குன்னூர்,

மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் குன்னூரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா குன்னூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியத்தை முன்வைத்து தி.மு.க. நடத்திய போராட்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தி.மு.க.வின் போராட்டம் மக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. காவிரி பிரச்சினையில் தி.மு.க.தான் துரோகம் செய்துள்ளது. பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த 6 வார காலத்தில் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண திட்டமிட்டு செயல்பட்டு வந்தது.

காவிரி பிரச்சினை 4 மாநில சம்பந்தப்பட்ட விவகாரம் ஆகும். தமிழகம் மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்று கோருகிறது. தி.மு.க. விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றுகிறது. நதிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசின் பட்டியலில் இருந்தால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து விடும்.

வாரியம் என்பது பிரதிநிதிகள் கொண்ட குழுவாகும். இதற்கு மாநில அரசுகள் பிரதிநிதிகளை அனுப்பவில்லை. சுப்ரீம் கோர்ட்டு காவிரி பிரச்சினையில் நல்ல முடிவு கொடுக்க உள்ளது. இந்த பிரச்சினையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் தமிழக மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். 1970-ம் ஆண்டில் ஹேமாவதி அணையை கர்நாடகா கட்டியது. அப்போது தமிழக முதல்- அமைச்சராக இருந்த கருணாநிதி அணை கட்டினால் கட்டி விட்டு போகட்டும் என்று சட்டமன்றத்தில் கூறினார். நீதிமன்றத்திலும் வழக்கை வாபஸ் பெற்றனர்.

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்வது போன்ற மாயதோற்றத்தை உருவாக்குகிறார்கள். கர்நாடகாவில் ராகுல் காந்தி காவிரியில் தண்ணீர் தராதே என்று பிரசாரம் செய்கிறார். நான் ஒரு விவசாயி. ஆனால் மு.க.ஸ்டாலின் விவசாயி அல்ல. காவிரி பிரச்சினையில் மோடி அரசு தான் தீர்வு கொடுக்க முடியும். 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அறிவுரைபடி நல்ல முடிவு ஏற்படும்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட போராட்டம் நடத்துகிறார்கள். அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்த ஆலை கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது. மராட்டியத்தில் உள்ள ரத்தனகிரியில் அமைக்க இருந்த இந்த ஆலைக்கு எதிர்ப்பு கிளம்பியது. அ.தி.மு.க. ஆட்சியில் 1994-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டது. யாரை ஏமாற்ற இவர்கள் நாடகமாடுகிறார்கள். இவர்கள் செய்த தவறை மறைக்கிறார்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அனுமதி கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் மோசமான கட்சிகள் திராவிட கட்சிகள் ஆகும். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக அணைகளையோ தடுப்பணைகளையோ கட்டவில்லை. இவர்கள் ஆட்சியில் தமிழகம் பாலைவனம் ஆகிவிட்டது. விவசாயிகளை ஏமாற்ற நாடகம் போடுகிறார்கள். தி.மு.க.வின் அத்தியாயம் முடிந்து விட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும்.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சூரப்பாவை துணைவேந்தராக நியமித்ததை குறை கூறுகிறார்கள். இந்த நியமனம் தவறு இல்லை. இதற்கு முன்பு அம்பேத்கார் சட்ட பல்கலைகழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த விஜயகுமார் என்பவர் இருந்தார். இந்த பிரச்சினைகள் எல்லாம் மக்களிடம் எடுபடாது.

கமல்ஹாசனின் பேச்சை மக்கள் கேட்க மாட்டார்கள். அவரை பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்க முடியுமா? ஆரம்ப பள்ளி ஆசிரியராக கூட நியமிக்க முடியாது. அவர் அனாவசியமாக பேசி வருகிறார். சுதந்திரத்துக்கு பின்பு நேர்மையான பிரதமராக மோடி உள்ளார். தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்.

நீட் தேர்வு பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கொண்டு வரப்பட்டது. மாநில அரசு இதில் ஓர் ஆண்டு விலக்கு கேட்டது. கடந்த ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்டு உள்ளது. 2018-19-ம் கல்வி ஆண்டில் நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story