கல்குவாரி-கிரஷர் அமைப்பதை தடுக்க வலியுறுத்தி நரிக்குறவர்கள் ஆர்ப்பாட்டம்


கல்குவாரி-கிரஷர் அமைப்பதை தடுக்க வலியுறுத்தி நரிக்குறவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 April 2018 4:30 AM IST (Updated: 8 April 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே கல்குவாரி மற்றும் கிரஷர் அமைப்பதை தடுக்க வலியுறுத்தி நரிக்குறவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் காரை மேற்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் மலையப்பநகர் மற்றும் ராமலிங்க நகர் உள்ளது. இங்கு நரிக்குறவர் இன மக்கள் மற்றும் கலைகூத்தாடிகள் இன மக்கள் பலர் வசித்து வருகின்றனர். முன்னொரு காலத்தில் அவர்கள் ஊசி, பாசிமணி உள்ளிட்டவற்றை விற்றும், தெருவில் நடனம் ஆடி மக்கள் தரும் வெகுமதியை வைத்து பிழைப்பு நடத்தினார்கள். பின்னர் திருச்சி மாவட்ட அப்போதைய கலெக்டராக இருந்த மலையப்பன், நட வடிக்கையின் பேரில் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை வளர்ச்சியடைய செய்யும் பொருட்டு நிலம் வழங்கப்பட்டது. இதனால் தான் அந்த பகுதிக்கு மலையப்பநகர் என பெயர் வந்தது.

மேலும் தாங்கள் விவசாயம் செய்து வாழ்வில் முன்னேற்றம் அடைய மலையப்பன் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகள் தான் காரணகர்த்தாவாக இருந்தனர். இந்நிலையில், எங்களது விவசாய தொழிலுக்கு தடை கல்லாக கல்குவாரி மற்றும் கிரஷர் அமைக்கும் பணியை செயல்படுத்த இருப்பது அச்சத்தை ஏற்படுத்துவதோடு வாழ் வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது என அந்த நரிக்குறவர்கள் தற்போது தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் நரிக்குறவர்கள் பலமுறை மனு கொடுத்தும் அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக கல்குவாரி- கிரஷர் அமைக்கும் முனைப்பில் தளவாட பொருட்களுடன் லாரியானது மலையப்ப நகருக்கு வந்த போது அதனை சிறைபிடித்து அவர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்த நிலையில் காரை மலையப்பநகர்-ராமலிங்க நகரில் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைப்பதை தடுக்ககோரியும், இனிமேல் இதுபோன்ற செயல்பாட்டுக்கு அதிகாரிகள் அனுமதி வழங் கக் கூடாது என்பதை வலி யுறுத்தியும் நரிக்குறவர்- கலைக் கூத்தாடிகள் இன மக்கள் சார்பில் பெரம்பலூர் புதிய பஸ்நிலைய பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கலைக்கூத்தாடி செல்வம் தலைமை தாங்கினார். நரிக்குறவர்கள் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் காரை.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜா சிதம்பரம், சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேசு கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு கல்குவாரி மூலம் மலைகளை வெட்டி எடுப்பதால் புவி யியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நீரா தாரம் மாசடைவதால் விவசாயத்தொழில் நலிவடைவது பற்றியும் எடுத்து கூறினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ராமலிங்கநகர்- மலையப்ப நகரில் கல்குவாரி, கிரஷர் அமைப்பதை முற்றிலும் கைவிடக்கோரி பொதுமக்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் கல்குவாரியால் ஏற் படும் தீயவிளைவுகள் பற்றிய பதாகைகளை கையில் பிடித்திருந்தனர். கல்குவாரியால் பாறைகளை வெடிவைத்து பிளக்கும் போது ஏற்படும் அதிர்வினால் வீடுகளில் விரிசல் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் வெடிமருந்துகள் நீர்நிலைகளில் கலப்பதால் நீராதாரம் மாசடைந்து விவசாயம் பாதிக்க வாய்ப்புள்ளது என ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள் வரகுபாடி சோழமுத்து, தனபால், விஜயன், சத்யா மற்றும் ம.தி.மு.க. நிர்வாகி அய்யலூர் சுப்ரமணி உள்பட வரகுபாடி, அய்யலூர், காரை, புதுக்குறிச்சி, ராமலிங்கநகர், மலையப்பநகர் கிராம மக்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story