மணல் குவாரியை தடைசெய்யக்கோரி அனைத்து கட்சியினர் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்


மணல் குவாரியை தடைசெய்யக்கோரி அனைத்து கட்சியினர் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 April 2018 4:15 AM IST (Updated: 8 April 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

திருமானூரில் மணல் குவாரியை தடை செய்யக்கோரி அனைத்து கட்சிகளின் சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த மணல் குவாரியில் பொக்லைன் எந்திரம் கொண்டு மணல் அள்ளப்பட்டதால் பல அடி ஆழத்துக்கு நிலத்தடி நீர் சென்று விட்டது. இதனால், டெல்டா பகுதியாக உள்ள திருமானூரில் தற்போது, ஆழ்குழாயில் தண்ணீர் மட்டம் ஆழத்துக்கு போய்விட்டது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணல்குவாரி மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது அரசு திருமானூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதனால், மேலும் நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்துக்கு போய்விடும். எனவே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைவதை தடை செய்ய வலியுறுத்தி இதற்காக ஏற்படுத்தப்பட்ட கொள்ளிடம் நீர் ஆதார பாதுகாப்புகுழு சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப் பட்டது.

ஊர்வலம்

மேலும், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைவதை தடுக்க வேண்டுமென கோரி நேற்று முன்தினம் திருமானூர் ஒன்றியத்தில் கொள்ளிடம் கரையோரம் உள்ள சுமார் 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று கொள்ளிடம் ஆற்றில் அமைய உள்ள மணல் குவாரியை தடைசெய்ய வலியுறுத்தி கொள்ளிடம் நீர் ஆதார பாதுகாப்புகுழு மற்றும் அனைத்து கட்சி சார்பில், ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் அமைக்காதே அமைக் காதே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்காதே எனவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியபடி அனைத்து கட்சியினர் சென்றனர். ஊர்வலத்தில் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம்

இதைதொடர்ந்து பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், த.மா.கா. மாவட்ட தலைவர் நடராஜன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொள்ளிடம் நீர் ஆதார பாதுகாப்பு குழு ஒருங் கிணைப்பாளர் தனபால் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் உலகநாதன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் வடிவேல்முருகன், தே.மு.தி.க. மாவட்ட துணைத்தலைவர் தங்க ஜெயபாலன், காங்கிரஸ் மகளிரணி மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைந்தால், நாம் மட்டுமன்றி நம்முடைய வருங்கால சந்ததியும் அழிந்து விடும். எனவே அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து போராட வேண்டும். மேலும், எந்த சூழ்நிலையிலும் மணல் குவாரியை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களிலிருந்து பின்வாங்குவதில்லை என பேசினர். இதில் பா.ம.க. மாவட்ட தலைவர் ரவிசங்கர், ல.தி.மு.க. மாவட்ட தலைவர் வினோத்ராஜ், லோக்ஜனசக்தி மாவட்ட தலைவர் சத்தியசீலன் மற்றும் சமூக ஆர்வலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story