காவிரி மேலாண்மைவாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பாடைகட்டி ஊர்வலம்


காவிரி மேலாண்மைவாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பாடைகட்டி ஊர்வலம்
x
தினத்தந்தி 8 April 2018 4:15 AM IST (Updated: 8 April 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆரணி அருகே கிராம மக்கள் பாடைகட்டி ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட்டு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பா.ம.க.வினர் நேற்று மத்திய அரசை கண்டித்து பாடை கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி பாடை தயார் செய்து அதில் மத்திய அரசு என எழுதி அதில் ஒட்டி வைத்து அந்த பாடையை கிராமம் முழுவதும் கருப்புக்கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஊர்வலம் ராட்டினமங்கலம்-சேவூர் பைபாஸ் ரோட்டிற்கு வந்ததும் அங்கு சாலையில் பாடையை வைத்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அவர்கள் ஒப்பாரி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு ஆரணி தாலுகா போலீசார் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா தலைமையில் விரைந்து சென்றனர். அவர்களிடம் நீங்கள் அனுமதியின்றி சாலை மறியல் செய்கிறீர்கள். உடனடியாக கலைந்து செல்லுங்கள். இல்லையேல் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று போலீசார் கூறினர். பின்னர் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா போராட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பாடையை தூக்கி அப்புறப்படுத்தினார்.

அதனை கிராம மக்கள் தீவைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தனியார் கல்லூரி பேராசிரியர் சிவா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மெய்யழகன், விவசாயிகள் தரணி, கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story