வேலூரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இளம்பெண் பலி; 4 பேர் படுகாயம்


வேலூரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இளம்பெண் பலி; 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 April 2018 4:18 AM IST (Updated: 8 April 2018 4:18 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் இளம்பெண் உடல் கருகி பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்,

வேலூர் கொணவட்டம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர். இவர், கன்சால்பேட்டை காந்திநகரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அத்துடன் சிவகாசி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பட்டாசுகள் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 1990-ம் ஆண்டு முதல் இந்த பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். நேற்று காலை ஆலைக்கு வந்த தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

காலை 10 மணியளவில் பட்டாசு தயாரிக்க பாஸ்பரஸ் நிரப்பும்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அப்போது பட்டாசுகள் ‘டமார்’, ‘டமார்’ என வெடித்து சிதறியதில் ஆலையின் மேற்கூரைகள் பறந்தன. கட்டிட சுவர்கள் இடிந்து விழுந்தன. வெடிசத்தம் கேட்டு வெளியே வந்த அப்பகுதி மக்கள், பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறியதை கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்து தீயணைப்பு துறையினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாக்கரடீஸ் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பட்டாசுகள் தொடர்ந்து வெடித்ததாலும், புகைமூட்டமாக காணப்பட்டதாலும் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

இந்த வெடிவிபத்தில் ஆலையில் பணிபுரிந்த கன்சால்பேட்டை இந்திரா நகரை சேர்ந்த ஜெயபால் மனைவி தீபா (வயது 25) உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கொணவட்டம் இந்திராநகரை சேர்ந்த சிவா (35), புஷ்பா (30), காந்திநகரை சேர்ந்த ஷீலா (30), கவியரசன் (32) ஆகியோர் பலத்த தீக்காயமடைந்து, உயிருக்கு போராடினார்கள். தொழிலாளர்கள் சுரேஷ், முகமது அலி, ஷபியுல்லா உள்பட சிலர் காயங்கள் இன்றி உயிர்தப்பினார்கள்.

படுகாயம் அடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், உதவி கலெக்டர் செல்வராசு, தாசில்தார் பாலாஜி, வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வெடிவிபத்தில் பலியான தீபாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு ஆலை உரிமையாளர் அப்துல்காதரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story