ரெயில்வேக்கு சொந்தமான தென்னந்தோப்பில் தீ விபத்து 30 மரங்கள் எரிந்து நாசம்


ரெயில்வேக்கு சொந்தமான தென்னந்தோப்பில் தீ விபத்து 30 மரங்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 9 April 2018 4:30 AM IST (Updated: 9 April 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

பொன்மலையில் ரெயில்வேக்கு சொந்தமான தென்னந்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 30-க்கும் மேற்பட்ட மரங்கள் எரிந்து நாசமடைந்தன.

பொன்மலைப்பட்டி,

திருச்சி பொன்மலையில் ரெயில்வேக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. அதை குத்தகைக்கு விடுவது வழக்கம். சில ஆண்டுகளாக அந்த தென்னந்தோப்பு போதிய பராமரிப்பின்றி குப்பைகள் நிறைந்து கிடந்தன. இந்நிலையில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் அந்த தென்னந்தோப்பில் கிடந்த குப்பையில் திடீரென தீ பிடித்தது. அந்த தீ சற்று நேரத்தில் அனைத்து பகுதிக்கும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ரெயில்வேக்கு சொந்தமான 2 தீயணைப்பு வாகனங்களும் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு வாகனம் ஆகியன சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. அதற்குள் தண்ணீரும் தீர்ந்து விட்டது. பின்னர் தமிழ்நாடு தீயணைப்பு வாகனம் 3 முறையும், ரெயில்வே தீயணைப்பு வாகனம் 6 முறையும் தண்ணீரை கொண்டு வந்து முற்றிலுமாக தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் தென்னை மரங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மரங்கள் தீயில் சேதமடைந்தன. இதேபோல ரெயில்வே பணிமனையிலும் குப்பைகள் நிறைந்த பகுதியில் நேற்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அந்த தீயையும் ரெயில்வே தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். இந்த 2 தீ விபத்து குறித்தும் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் இதே பகுதியில் ரெயில்வேக்கு சொந்தமான 2 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story