குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 April 2018 4:15 AM IST (Updated: 9 April 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே ராஜாளிப்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடிநீர் வேண்டி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே ராஜாளிப்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அன்றாட குடிநீர் தேவைக்கு ஆழ்துழாய் கிணறு அமைக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரிவர வராததால் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.

சாலை மறியல்

இருப்பினும் இதுகுறித்து அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் விராலிமலை-மணப்பாறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story