அறிவியல் ஆராய்ச்சியில் முதலிடம் பிடித்த மாணவர் ஜப்பான் சென்று விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்


அறிவியல் ஆராய்ச்சியில் முதலிடம் பிடித்த மாணவர் ஜப்பான் சென்று விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்
x
தினத்தந்தி 9 April 2018 4:15 AM IST (Updated: 9 April 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

தேசிய அளவில் அறிவியல் ஆராய்ச்சியில் முதலிடம் பிடித்த கரூர் மாணவர் ஜப்பான் சென்று அங்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்.

வெள்ளியணை,

ஒருவரின் திறமைகளை வாழும் சூழ்நிலையோ, பயிலும் கல்வி நிறுவனங்களோ உருவாக்குவதில்லை. பள்ளி பருவத்தில் கல்வி பயிலும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு திறமைகளை தங்களுக்குள் ஒளித்து வைத்து கொண்டு உள்ளனர். தங்களிடம் உள்ள திறமைகளை உரிய நேரத்தில் வெளிப்படுத்தி ஆசிரியர்களின் ஆலோசனைகளும், ஆதரவையும் பெறும் மாணவர் உயர்நிலைக்கு செல்கிறான். அந்த வகையில் கிராமத்து சூழ்நிலையில் பிறந்து வளர்ந்து, அரசுப்பள்ளியில் படித்து, அறிவியலில் சாதனை படைத்து ஜப்பான் நாட்டிற்கு செல்கிறார் ஒரு மாணவர்.

கரூர் மாவட்டம், மணவாடி ஊராட்சி, பெருமாள்பட்டி காலனியை சேர்ந்த ஹரிஹரன்(வயது 17) என்ற மாணவர் தான் அந்த சாதனையாளர். இவர் சிறுவயதாக இருக்கும் போதே தந்தை மருதமுத்து குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். தாயார் கண்ணம்மாள் சித்தாள் வேலைக்கு சென்று மாணவர் ஹரிஹரனை வளர்த்து வருகிறார். ஆரம்பக்கல்வியை வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் படித்த மாணவர் ஹரிஹரன் தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி உள்ளார்.

கிராம சூழ்நிலையில் அமைந்த இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் அறிவியல் திறமைகளை கண்டறிந்து அவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கி வரும் அறிவியல் ஆசிரியர் தனபால் இம்மாணவரின் அறிவியல் ஆர்வத்தை கண்டறிந்து ஆக்கமும், ஊக்கமும் கொடுத்ததின் பயனாக இம்மாணவரால் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாமல் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் சி.என்.-4 நேப்பியர் என்ற பயிரிலிருந்து மின்சாரம் தயாரித்தல், நீர் தாங்கிகள் செறிவூட்டுதல், சூழலியல் கழிவறை, கொம்பு சாணம் உரம் தயாரித்தல் ஆகிய அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க முடிந்தது. இக்கண்டுபிடிப்புகள் தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டு முதல் பரிசாக தங்கப்பதக்கமும், இன்ஸ்பயர் விருதையும் மாணவருக்கு பெற்றுத்தந்தது.

இதன் மூலம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு திறமைகளை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த மாணவர்களை கண்டறிந்து பள்ளி கல்வித்துறை மற்றும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தேர்வு செய்து அவர்களை “அறிவியல் பாடத்தில் ஜப்பான் ஆசிய மாணவர்களின் பரிமாற்றத்திட்டம்” என்ற திட்டத்தின் மூலம் ஜப்பானுக்கு அனுப்பி அங்கு அந்நாட்டின் அறிவியல் முன்னேற்றங்களை காணச்செய்வதுடன் தலைசிறந்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் செய்து வருகிறது. இவ்வாறு ஜப்பான் செல்லும் 6 மாணவர்கள் கொண்ட குழுவில் ஒருவராக மாணவர் ஹரிஹரனும் தேர்வு செய்யப்பட்டு வருகிற மே மாதம் 12-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை ஜப்பானில் தங்கி அறிவியல் நிகழ்ச்சிகளை அறிந்து வர உள்ளார்.

இதுகுறித்து மாணவர் ஹரிஹரன் “தினத்தந்தி“ நிருபரிடம் கூறியதாவது:-

நான் 6-ம் வகுப்பில் இப்பள்ளியில் சேர்ந்தபோது காலை பள்ளி தொடங்கும் முன் செய்தித்தாள்களை படித்து அதில் வரும் அறிவியல் கட்டுரைகளை தெரிந்து கொண்டு அதில் உள்ள சந்தேகங்களை ஆசிரியர் தனபாலிடம் கேட்பது உண்டு. இதனால் எனது அறிவியல் ஆர்வத்தின் மீது அதிக அக்கறை கொண்டு எனது அறிவியல் கண்டுபிடிப்புக்கு அறிவியல் ஆசிரியர் தூண்டுகோலாக அமைந்தார்.

மேலும் தொடர்ந்து செய்தித்தாள்கள் மூலம் கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சினை, சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிப்பு, காவிரி நீர்பிரச்சினையால் விவசாயிகள் பாதிப்பு போன்ற சமுதாய பிரச்சினைகளை மையமாக வைத்து ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்களை தெரிந்து கொண்டு இவற்றுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கும், சமுதாயத்திற்கும் தீங்கு விளைவிக்காத வகையில் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்று முயன்றேன். எனது அந்த கண்டுபிடிப்பின் மூலம் நான் ஜப்பான் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உதவிய தலைமை ஆசிரியர் தமிழரசன், மற்ற ஆசிரிய- ஆசிரியைகள், சக மாணவர்கள் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போது பிளஸ்-2 முடித்துள்ள நான் மேற்கொண்டு நல்லமுறையில் படித்து அறிவியல் ஆராய்ச்சி படிப்பை முடித்து, சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story