ஆத்தூரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு


ஆத்தூரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 9 April 2018 4:42 AM IST (Updated: 9 April 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களின் உருவங்களை வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆத்தூர்,

ஆத்தூரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான அவர்களது உருவங்களை வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆத்தூர் மகளிர் போலீஸ்நிலையம் அருகே உள்ள ஜோதிநகர் பகுதியில் வசிப்பவர் செல்வகணேஷ் (வயது36). தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறையில் உதவி செயற்பொறியாளராக சேலத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 6-ந் தேதி குடும்பத்துடன் சின்னசேலத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று இருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை செல்வகணேஷ் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் செல்வகணேசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் மாமனார் வீட்டில் இருந்து புறப்பட்டு நேற்று ஆத்தூரில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் வெளிப்புற கதவு மற்றும் உட்புற கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து செல்வகணேஷ் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்.கார்த்திக்குமார், இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கடந்த ஆண்டும் தனது வீட்டில் திருடர்கள் புகுந்து நகை, பணத்தை திருடி சென்று விட்டனர் என்றும், மேற்கொண்டு திருட்டு நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தி இருக்கிறேன் என்றும் செல்வகணேஷ் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் 2 திருடர்கள் வீட்டின் பூட்டை உடைக்கும் காட்சியும், நகைகளை திருடும் காட்சியும் பதிவாகி இருந்தது. ஒருவன் மட்டும் முகத்தை கைக்குட்டையால் மறைத்து இருந்தான். அவர்கள் கைரேகை பதிவாகாமல் இருப்பதற்காக கையுறை, கால்களில் சாக்ஸ் போட்டு அதன்மேல் செருப்புஅணிந்து இருந்தனர். இந்த 2 பேருடைய உருவத்தை போலீசார் பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். மகளிர் போலீஸ் நிலையம் அருகே நடந்த இந்த திருட்டு சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story