கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு குளிர்பானங்கள் அழிப்பு


கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு குளிர்பானங்கள் அழிப்பு
x
தினத்தந்தி 10 April 2018 4:15 AM IST (Updated: 10 April 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் பழக்கடை, குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காலாவதியான குளிர்பானங்கள் அழிக்கப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின் பேரில் திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் உள்ள பழக்கடைகள், குளிர்பான கடைகள் மற்றும் பேக்கரிகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை தேரடி வீதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் கயிலேஷ்குமார், சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் பேக்கரி கடைகளில் உள்ள குளிர்பான பாட்டில்களில் உள்ள காலாவதி தேதி போன்றவற்றை பார்வையிட்டனர். பழக்கடை மற்றும் பழ மண்டிகளில் கல் வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். மேலும் பழச்சாறு கடைகளில் பழச்சாறு தயார் செய்ய பயன்படுத்த ஐஸ்கட்டிகள், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகிறதா, நல்ல பழங்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர்.

அப்போது காலாவதியான குளிர்பானங்கள் அழிக்கப்பட்டது. மேலும் பழக்கடைகளில் அழுகிய பழங்களை அகற்ற உத்தரவிட்டார்.

இதுகுறித்து நியமன அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது:-

தற்போது வெயில் காலம் தொடங்கி உள்ளதால் மக்கள் பெரும்பாலும் பழச்சாறு, குளிர்பானங்கள் போன்றவற்றை விரும்புவார்கள். அதன்படி கடைகளில் தரமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை நகர பகுதியில் கடந்த 3 நாட்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் காலாவதியான குளிர்பானங்கள், அழுகிய நிலையில் உள்ள பழ வகைகள், பிளாஸ்டிக் பேப்பர்கள் போன்றவை என ரூ.40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் அழிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும் என்று கடைக்காரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் கடைகளில் காலாவதியான பொருட்கள் ஏதேனும் விற்பனை செய்யப்படுவது போன்ற தகவல்கள் கண்டறிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்க அரசு சார்பில் 94440 42322 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story