சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்திய முருகன்


சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்திய முருகன்
x
தினத்தந்தி 10 April 2018 4:30 AM IST (Updated: 10 April 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

மத்திய சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் நேற்று சாட்சிகளிடம் ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதி முருகன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் அறையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் செல்போன், சார்ஜர் மற்றும் சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டதாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொருமுறையும் வழக்கு விசாரணையின் போது முருகன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்துவரப்படுகிறார். மாஜிஸ்திரேட்டு அலீசியா முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக முருகன் நேற்று கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் சிறை அதிகாரி உள்பட 7 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிகேட்டு முருகன் மனுதாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் நேற்று சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

உதவி ஜெயிலர் மற்றும் ஏட்டு ஆகிய 2 பேரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கறிஞர் இன்றி முருகனே உதவி ஜெயிலர் மற்றும் ஏட்டு ஆகியோரிடம், மாஜிஸ்திரேட்டு அலீசியா முன்னிலையில் குறுக்கு விசாரணை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு அலீசியா தள்ளிவைத்தார். பின்னர் முருகன் மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


Next Story