காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஓய்வு பெற்ற போலீசார் ஊர்வலம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஓய்வு பெற்ற போலீசார் ஊர்வலம்
x
தினத்தந்தி 10 April 2018 4:15 AM IST (Updated: 10 April 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற போலீசார் தஞ்சையில் ஊர்வலம் நடத்தினர். கலெக்டரிடம் மனுவும் அளித்தனர்.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட ஓய்வு பெற்ற போலீசார் நல சங்கம் சார்பில் ஊர்வலம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. தஞ்சை திலகர் திடலில் இருந்து தொடங்கிய ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் தேவன் தலைமை தாங்கினார்.

ஊர்வலத்தை ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சுப்பிர மணியம் தொடங்கி வைத்தார். ஊர்வலம் மாலைநேர காய்கறி மார்க்கெட், ராசாமிராசுதார் மருத்துவமனை சாலை, அண்ணாசிலை வழியாக பனகல் கட்டிடத்தை அடைந்தது.

இதில் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு இந்திரஜித், ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பேரிச்சாமி, மாவட்ட செயலாளர்கள் பத்மநாபன், ராஜகுரு, மாநில கொள்கை பரப்பு செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் நெல்சன், ராஜமாணிக்கம், ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஊர்வலத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வருகிற 1-7-2018 முதல் 30-6-2022 வரை 4 ஆண்டுகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை ரூ.5 லட்சமாகவும், புற்றுநோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.7½ லட்சமாகவும் உயர்த்த வேண்டும்.

அனைத்து நோய்களுக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் பணமில்லா சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பின்னர் இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை, நிர்வாகிகள், தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். 

Next Story