நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 16 பவுன், ரூ.3 லட்சம் திருட்டு போலீசார் வலைவீச்சு


நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 16 பவுன், ரூ.3 லட்சம் திருட்டு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 10 April 2018 4:15 AM IST (Updated: 10 April 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 16 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் விசாலாட்சி நகரை சேர்ந்தவர் சுபா சரவணன் (வயது 48). இவர், ஜெயங்கொண்டம் கடைவீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள். இருவரும் வெளியூரில் படித்து வருகின்றனர். கணவன்- மனைவி மட்டுமே வீட்டில் வசித்து வருகின்றனர். சுபா சரவணன் தனது மனைவி தேவியை (43) அழைத்து கொண்டு தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதேபோல் நேற்று காலை 6 மணிக்கு கணவன்-மனைவி இருவரும் நடைபயிற்சிக்கு சென்றனர். அப்போது தேவி தனது கழுத்தில் அணிந்திருந்த நகையை கழற்றி பீரோவில் வைத்து விட்டு, வீட்டின் பின்பக்க கதவை தாழ்பாள் போட்டார். பின்னர் முன்பக்க கதவை பூட்டாமல் சாத்திவிட்டு, இரும்பு கேட்டை மட்டும் பூட்டு போட்டு பூட்டி விட்டு இருவரும் சென்றனர்.

பின்னர் இருவரும் நடைபயிற்சியை முடித்து கொண்டு 7 மணியளவில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுபா சரவணனும், அவரது மனைவி தேவியும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவை பார்த்த போது, பீரோவும் உடைக்கப்பட்டு துணிகள் கலைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவிலிருந்த 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதில் பீரோவில் இருந்த பழைய ரூ.500 நோட்டுகளை மட்டும் மர்ம நபர்கள் எடுக்காமல் விட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சுபா சரவணன் புகார் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீஸ் மோப்ப நாய் (டிக்ஸி) மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தினர். நகைக்கடை உரிமையாளர் வீட்டில் நகை- பணம் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த 13 நாட்களுக்கு முன்பு விசாலாட்சி நகருக்கு அடுத்த பகுதியான வேலாயுதநகரில், பெண்ணை கொலை செய்து விட்டு பணம், நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஜெயங்கொண்டம் நகரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவ வடு மறைவதற்குள், அடுத்த திருட்டு சம்பவம் அரங்கேறி இருப்பது ஜெயங்கொண்டம் பகுதி பொதுமக்களிடத்தில் பெருத்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஜெயங்கொண்டம் பகுதியில் போலீசார் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, இரவு மற்றும் பகல் நேரங்களில் தீவிர ரோந்து பணிகளை போலீசார் முடுக்கி திருட்டு சம்பவங்களை தடுத்து நிறுத்திட வேண்டும். மேலும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்து பொதுமக்களின் அச்சத்தை காவல் துறை போக்கவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Next Story