பெரம்பலூரில் தேசிய நெடுஞ்சாலையில் நரிக்குறவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


பெரம்பலூரில் தேசிய நெடுஞ்சாலையில் நரிக்குறவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 April 2018 7:52 AM IST (Updated: 11 April 2018 7:52 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் தேசிய நெடுஞ்சாலையில் நரிக்குறவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் காரை மலையப்பநகர் பகுதியில் நரிக்குறவர்கள் பரவலாக வசித்து வருகின்றனர். குடி யிருப்புகள் அதிகமுள்ள தங்கள் பகுதியில் குஜராத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறு வனம் மூலம் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும், கல்குவாரி-கிரஷரால் விவசாயம் பாதிக்கக்கூடும் என்பதால் அதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அந்த மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த தனியார் நிறுவனம் சார்பில் மலையப்ப நகரில் தளவாட பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டு சர்வே எடுக்கும் பணி நடந்ததாக தெரிகிறது. இதையறிந்த நரிக்குறவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அந்த பொருட்களை பாடாலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து கல்குவாரி-கிரஷர் அமைக்கும் பணியை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அந்த தனியார் நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், நரிக்குறவர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் காரை சுப்ரமணியன் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்டோரை பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு விசாரணைக்காக நேற்று அழைத்தனர். அப்போது கல்குவாரி பிரச்சினை என்பது பொதுமக்கள் வாழ்வியல் பிரச்சினை. இதில் தனிப்பட்ட தலையீடு ஏதுமில்லை. மேலும் சம்பவம் நடந்த அன்று நான் வெளியூரில் இருந்தேன் என காரைசுப்ரமணியன் போலீசில் தெரிவித்தார். இந்த நிலையில் அந்த தனியார் நிறுவனத்தினர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டியும், தங்கள் மீது பொய்வழக்கு ஏதும் போடாமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கல்குவாரி-கிரஷர் அமைப்பதை கைவிடக்கோரியும் மனு கொடுப்பதற்காக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இதையறிந்த மலையப்பநகர் நரிக்குறவர்கள் தங்களது குழந்தைகளுடன் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், மாவட்ட கலெக்டரை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பின்னர் மதியம் கலெக்டர் புறப்பட்டு செல்லும் போது பேசியபோது கூட கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டதாகவும் அந்த மக்கள் குற்றம் சாட்டினர். இதனை கண்டித்து பெரம்பலூர் துறைமங்கலம் ஏரி அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அந்த மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந் திரன், இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், ரத்தினாம்பாள் உள்பட போலீசார் அந்த மக்களை சமாதானம் செய்து சாலையோரமாக அழைத்து வந்தனர். பின்னர் அந்த மக்கள் போலீஸ் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவிரி பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினையை போல் நரிக்குறவர் இன மக்களின் வாழ்வாதார பிரச்சினை போராட்டம் விரைவில் வரும். கல்குவாரி-கிரஷர் பிரச்சினையில் உரிய தீர்வு காணப்படாவிட்டால் வீட்டுக்கு ஒருவர் தீக்குளித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என நிருபர்களிடம் அந்த மக்கள் கூறினர். மேலும் மிரட்டல் விடுக்கும் வகையில் எங்களை பேசிய அந்த தனியார் நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்தனர். இதற்கிடையே மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து, போலீஸ் தரப்பில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story