காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து இரவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து இரவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
x
தினத்தந்தி 12 April 2018 4:45 AM IST (Updated: 12 April 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் மாணவர்கள் திடீரென்று இரவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்திய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். திருச்சி கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடைபெற்ற இடத்திலும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் திருச்சி கோர்ட்டு எம்.ஜி.ஆர்.சிலையில் இருந்து தென்னூர் அண்ணா நகர் செல்லும் இணைப்பு சாலையின் மையத்தில் நேற்று இரவு 8.30 மணியளவில் சுமார் 500 மாணவர்கள் திடீரென்று ஒன்று திரண்டு சாலையில் அமர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் இளைஞர்களும் பங்கேற்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தை கைவிடுமாறு கூறினர். இதற்கு மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.இதுகுறித்து உடனடியாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜூக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கமிஷனர் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். அதற்கு மாணவர்கள் மறுத்தனர். மாணவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்காக மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது மாணவர்கள் போலீசாரின் பிடியில் சிக்காமல் கோஷங்களை எழுப்பியவாறு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

போலீசார் அவர்களை விரட்டி சென்று, பிடித்து கைது செய்ய முயற்சித்தனர். அப்போது சில மாணவர்களை கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது தென்னூர் உழவர் சந்தை அருகே சென்ற அந்த அரசு பஸ்சின் கண்ணாடியை மாணவர்கள் கல்வீசி தாக்கியும், அடித்தும் நொறுக்கினர். போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்யும் தகவல் திருச்சி மாநகர் முழுவதும் வாட்ஸ்-அப்பில் பரவியதால் தென்னூர் உழவர் சந்தை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசாரை கண்டித்து மாணவர்கள்-இளைஞர்கள் ஒன்று திரண்டனர்.

இதனால் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவர் களை தடியடி நடத்தி கலைத்து கொண்டிருந்தனர். இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து மைசூருக்கு திருச்சி வழியாக சென்ற கர்நாடக அரசு பஸ் திருச்சி அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த மாணவர்கள் அந்த பஸ்சின் கண்ணாடியை கல்வீசியும், அடித்தும் உடைத்தனர்.

இந்த சம்பவம் திருச்சி மாநகர் முழுவதும் காட்டு தீ போல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் போராட்டம் நடைபெறாமல் இருக்க திருச்சி கோர்ட்டு எம்.ஜி.ஆர்.சிலை அருகே ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த சாலையின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்பு கம்பிகள் போட்டு போலீசார் அடைத்துள்ளனர். போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. மேலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு, அந்த இடத்தை கேமரா மூலம் போலீசார் கண்காணித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். அவ்வழியாக கூட்டமாக மாணவர்கள், இளைஞர்கள் நடந்து வந்தால், அவர்களை போலீசார் அடித்து விரட்டுகின்றனர். மேலும் திருச்சி மாநகரம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் போராட்டம் குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

“பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகவும், அனுமதியின்றி போராட்டம் நடத்திய மாணவர்களில் 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளம் மூலம் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய மாணவர்களை காவிரி பிரச்சினைக்காக போராட்டம் நடத்த வேண்டும் என்று சிலர் தூண்டி விடுகின்றனர். அப்படி போராட்டம் நடத்தும் மாணவர்களை போலீசார் கைது செய்வதால், மாணவர்களின் எதிர்காலம் தான் பாதிக்கும். அரசு வேலை கிடைக்காது. இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்“ என்றார். 

Next Story