தினம் ஒரு தகவல் : மீன்வளத்துறை வரலாறு


தினம் ஒரு தகவல் : மீன்வளத்துறை வரலாறு
x
தினத்தந்தி 12 April 2018 10:42 AM IST (Updated: 12 April 2018 10:42 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டின் மீன்வளத்துறை 1905-ம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் தொடங்கியது.

மீனவர்களின் மீன்பிடி முறை மிகப் பழமையானதாக உள்ளதாகவும், அதை மேம்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்திலும் புதிய மீன்பிடி முறைகளை, அதாவது மிதவெப்ப மண்டலத்தில் பயன்படுத்தும் மீன்பிடி முறைகளை அப்போதைய ஆங்கிலேய அரசு ஆராயத் தொடங்கியது. இழுவை மடிகளைப் பொருத்திய விசைப்படகு வைத்து அதிகம் மீன் புழங்கும் இடங்களைக் கண்டறிந்தது.

ஆரம்பகட்ட பரிசோதனைகளை வைத்து அப்போதைய ஆங்கிலேய அரசு இந்தியா இழுவை மடிகள் பயன்படுத்த ஒரு தகுந்த இடமாக இருக்கும் என முடிவு செய்தது. அதன்படி தமிழ்நாடு இழுவை மடிகள் பொருத்திய விசைப்படகைப் பயன்படுத்துவதில் முதல் மாநிலமாகத் திகழ்ந்தது.

நாட்டின் விடுதலைக்குப் பின்பு இந்திய அரசின் முதல் திட்டக்குழுவின் நோக்கமாக மீன் வளர்ச்சியை அதிகரித்து, மீனவ மக்களை ஏழ்மையில் இருந்து வெளியே கொண்டுவரத் திட்டமிடப்பட்டது. இதற்கு இழுவை மடிகள் பொருத்திய விசைப்படகுகளைப் பயன்படுத்த வேண்டுமென்பதை நியாயப்படுத்தியது. ஆனால் ஐந்தாவது திட்டக்குழுவின் முடிவில் மீனவச் சமுதாயங்கள் வறுமையில் தள்ளாடிக்கொண்டிருந்த போதிலும், அந்நியச் செலாவணியை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கமாக மாறியது.

வளர்ச்சி ஒரு பக்கம் இருக்க மீன்வளத்துறை மீன் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தையும் கொண்டிருக்கிறது. மீன்வளத் துறை மீன் வளத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளும் ஒரே முயற்சி கோடை காலத்தில் 45 நாள் மீன்பிடி தடை விதிப்பது. இந்த 45 நாள் தடைக் காலத்தில் மீன்கள் குஞ்சு பொரிப்பதாகவும், அதைப் பாதுகாக்கவே இந்த மீன்பிடி தடை என்றும் சொல்கிறது, மீன்வளத்துறை. இந்த ஒரு விளக்கம் ஏராளமான அனுமானங்களை உள்ளடக்கியது.

ஏனென்றால் எல்லா மீன்களும் இந்த 45 நாட்களுக்குள் இனப்பெருக்கம் செய்கின்றன என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தத் தடைக்கால நடவடிக்கை 1983-ல் நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பின் கடல் சூழலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் நம் மீன்வளத்துறை அதே பழைய தர்க்கத்தைப் பயன்படுத்தி மீன்பிடிக்கத் தடை விதிப்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. மேற்கூறிய ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது இந்த 45 நாள் தடைக்காலம் மீன்வளத்தைப் பாதுகாக்கும் முயற்சியின் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்றே கருத வேண்டும் என்று கடலியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

Next Story