குமரி மாவட்ட ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தக்கோரி கலெக்டரிடம் மனு


குமரி மாவட்ட ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தக்கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 13 April 2018 4:30 AM IST (Updated: 12 April 2018 10:19 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தக்கோரி நேற்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

நாகர்கோவில்,

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் குமரி மாவட்டக்குழு நிர்வாகிகள் ரவி, ரெகுபதி, உஷாபாசி, மேரி ஸ்டெல்லாபாய், சிவானந்தம், சசிகுமார், சாகுல் ஹமீது உள்பட ஏராளமானோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

குமரி மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் 95 ஊராட்சிகள் உள்ளன. இதில் தற்போது 100 நாள் வேலை அமல்படுத்தவில்லை. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் மிகவும் வறுமையில் கஷ்டப்படுகிறார்கள். தற்போது தினக்கூலி 224 ரூபாய் என அரசு முடிவு செய்துள்ளது. வேலை அட்டை பெற்றுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வழங்கவில்லை. ஏற்கனவே செய்து வந்த நீர் நிலைகள் ஆழப்படுத்துதல், வாய்க்கால்கள் தூர்வாருதல், மண்சாலை அமைத்தல் போன்ற வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வேலை உத்தரவு பட்டியல் என காரணம் காட்டி வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாய்க்கால்களில் தடுப்பணை கட்டுவது போன்ற புதிய வேலைகள் அமல்படுத்தப்போவதாக கூறப்படுகிறது. எனவே கிராமப்புற ஏழைகள், நடுத்தர மக்களுக்கு ஓரளவு ஆறுதல் அளித்து வந்த 100 நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக முடக்கும் அரசின் இந்த நடவடிக்கையை கண்டிக்கிறோம். 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தொடர்ந்து முழுமையாக வேலை வழங்க வேண்டும். ஊரக வேலைத்திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும். வேலை உத்தரவு அனைத்து ஊராட்சிகளிலும் நிறைவேற்ற வேண்டும்.

வேலை செய்கிற அனைத்து தொழிலாளர்களுக்கும் தினக்கூலி ரூ.224 வழங்க வேண்டும். வங்கி முகவர்கள் வழியாக வேலை இடத்தில் வாரந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும். குப்பை அகற்றும் தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.500 வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story