இரட்டை கொலை வழக்கில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


இரட்டை கொலை வழக்கில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 13 April 2018 4:45 AM IST (Updated: 13 April 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்டம் வீராணம் அருகே பள்ளிக்கூடதாதனூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2003-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் தேதி திருவிழா நடைபெற்றது. அப்போது, அதேபகுதியை சேர்ந்த குப்புசாமி (வயது 23), சுந்தர்ராஜன் (25) ஆகியோர் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து பண்டிகை நடத்த ஏற்பாடு செய்து வந்தனர். இதுதொடர்பாக இவர்களுக்கும், அதேபகுதியை சேர்ந்த நடேசன் (38) தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அப்போது, குப்புசாமி, சுந்தர்ராஜன் ஆகிய இருவரையும் நடேசன் தரப்பினர் அடித்து கொலை செய்தனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக வீராணம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, 2003-ம் ஆண்டில் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பொன்.மாணிக்கவேல், ஊரில் உள்ள முக்கியமான ஆட்களை பிடித்து விசாரணை நடத்தினார்.

இதையடுத்து, ஊர்பொதுமக்கள் அனைவரும் நாங்கள் தான் கொலை செய்தோம் என்றும், இதனால் எங்களையும் கைது செய்யுங்கள் எனக்கூறியும் கலெக்டர் அலுவலகம் எதிரே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் சேலம் நீதிமன்றத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அனைவரையும் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பொன்.மாணிக்கவேல் உத்தரவிட்டார். அதன்பேரில் ஊர்மக்கள் சிலரை வீராணம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது ஒருபுறம் இருக்க, இரட்டை கொலையில் குற்றம் செய்யாதவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கவும், தவறு செய்தவர்களை மட்டும் வழக்கில் சேர்த்து கொள்ளும் வகையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் நடேசன் உள்பட 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை தவிர மற்றவர்கள் குற்றப்பத்திரிகையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மாவோயிஸ்ட் பழனிவேலும் ஒருவர் ஆவார். இவர் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்ததால் அவர் மீதான வழக்கு மட்டும் தனியாக பிரிக்கப்பட்டது. அதாவது கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று நீதிபதி ரவீந்திரன் தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பில், இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடேசன், ஜெகன் என்கிற ஜெகநாதன் (28), குமரவேல் (27), அண்ணாமலை (27), செல்வம் (27), தியாகராஜன் (21), செல்வராஜ் (38) ஆகிய 7 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மேலும், சேகர் (29), தர்மலிங்கம் (27), செல்வம் (26), குமரேசன் (23), மாணிக்கம் (25) ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மொத்தம் 12 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அதேசமயம், வழக்கில் தொடர்புடைய விஜயா, கிருஷ்ணம்மாள், மாது ஆகிய 3 பெண்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் மட்டும் விதித்து நீதிபதி ரவீந்திரன் தீர்ப்பு கூறினார்.

மேலும், குட்டி என்கிற செல்வம், அருணாச்சலம், முருகேசன், கலைவாணன், மணிமாறன் ஆகிய 5 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய சடையன், கருப்பண்ணன், நிலா ஆகிய 3 பேரும் விசாரணை நடைபெற்ற காலத்தில் இறந்துவிட்டதால் வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இரட்டை கொலை வழக்கில் 12 பேரையும் தனித்தனியாக அழைத்து என்ன சட்டத்தின்படி என்ன தண்டனை வழங்கப்படுகிறது என நீதிபதி கூறினார். அப்போது, தண்டனை விவரம் கேட்டவுடன் அவர்கள் அனைவரும் கண்ணீர்விட்டு கதறினர். அதேசமயம், நடேசன் உள்ளிட்ட 12 பேரின் உறவினர்களும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். அவர்களும் தண்டனையை அறிந்தவுடன் கதறி அழுதனர். இதனால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. அதைத்தொடர்ந்து தண்டனை பெற்ற 12 பேரையும் போலீசார் வேனில் ஏற்றி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story