மாணவிகள் எலிமருந்து தின்ற விவகாரம்: விடுதி காப்பாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்


மாணவிகள் எலிமருந்து தின்ற விவகாரம்: விடுதி காப்பாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 14 April 2018 3:45 AM IST (Updated: 14 April 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை அருகே விடுதி மாணவிகள் எலிமருந்து தின்ற விவகாரத்தில், விடுதி காப்பாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அனுக்கூரில் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி உள்ளது. இங்கு 44 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் பாண்டகப்பாடியை சேர்ந்த மணிமேகலை(வயது14), ரஞ்சன்குடியை சேர்ந்த சினேகா(14) ஆகியோர் கடந்த வாரம் விடுமுறைக்காக வீட்டுக்கு சென்றனர்.

முன்னதாக மாணவிகள் இருவரும் தாங்கள் பயன்படுத்திய துணிகளை துவைத்து விடுதியில் உலர வைத்து விட்டு சென்றனர். பின்னர் 9-ந் தேதி விடுதிக்கு வந்த போது தாங்கள் துவைத்து உலர வைத்திருந்த துணிகள் காணாமல் போய் இருந்தது. இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக பெற்றோர் விடுதி காப்பாளர் நிரோஷாவிடம், விடுதியில் உலர வைத்த துணிகள் எப்படி காணாமல் போகும் என கேட்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து விடுதி காப்பாளர் நிரோஷா, விடுதி காவலர் செல்லபாப்பு மற்றும் விடுதி துப்புரவு பணியாளர் சந்திரா ஆகியோர் மாணவிகளை அழைத்து விடுதியில் நடக்கும் அனைத்தையும் வீட்டிற்கு தெரியப்படுத்துவீர்களா? என கேட்டு சண்டை போட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மாணவிகள் மணிமேகலை, சினேகா ஆகியோர் கடந்த 11-ந் தேதி விடுதியிலிருந்து புறப்பட்டு பள்ளிக்கு சென்றனர். அப்போது அந்த வழியில் உள்ள கடையில் எலி மருந்து (விஷம்) வாங்கி இருவரும் தின்றனர். பின்னர் பள்ளிக்கு சென்ற மாணவிகள் வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மயங்கி விழுந்த மாணவிகள் மணிமேகலை, சினேகா ஆகியோரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கலெக்டர் சாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் விடுதி காப்பாளர் நிரோஷா, காவலர் செல்லபாப்பு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தும், துப்புரவு பணியாளர் சந்திராவை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

Next Story