எந்த பிரச்சினை இருந்தாலும் யாரும் தீக்குளிக்காதீர்; தீக்குளிப்பது தீர்வாகாது வைகோ கண்ணீர் மல்க பேட்டி


எந்த பிரச்சினை இருந்தாலும் யாரும் தீக்குளிக்காதீர்; தீக்குளிப்பது தீர்வாகாது வைகோ கண்ணீர் மல்க பேட்டி
x
தினத்தந்தி 14 April 2018 4:45 AM IST (Updated: 14 April 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

எந்த பிரச்சினை இருந்தாலும் யாரும் தீக்குளிக்காதீர், தீக்குளிப்பது தீர்வாகாது என மதுரையில் வைகோ கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

மதுரை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மைத்துனர் மகன் சரவணசுரேஷ், விருதுநகரில் நேற்று தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், வைகோ விரைந்து வந்து அவரை சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது–

சரவண சுரேசுக்கு என் தலைமையில் தான் திருமணம் நடந்தது. அருமையான குடும்பம், ரொம்ப அமைதியானவன். அரசியல் ரீதியாக என்னுடன் பணியாற்றியவன். பல வருடங்கள் என்னுடன் பணியாற்றி இருந்தாலும் இதுவரை ஒரு புகைப்படம் கூட என்னுடன் சேர்ந்து எடுத்ததில்லை.

எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. விருதுநகர் பாராளுமன்றத்தொகுதி தேர்தலின்போது எனது வரவு–செலவு கணக்குகளை கவனித்துக் கொண்டவன், சரவணசுரேஷ். குடும்பத்தில் எனக்கு அரசியல் ரீதியாக உதவிய அவன், தற்போது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ பிரச்சினையில் உறுதியோடு போராடி வந்த என்னை சிலர் அவதூறாக பேசி வருவதாக என்னிடம் கூறி வருந்தினான். அப்போது இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதே என்று கூறி சமாதானம் செய்து வைத்தேன்.

கடந்த சில நாட்களாக சோகமாக இருந்த அவன் நடைபயிற்சிக்கு செல்வதாக கூறி வெளியே சென்று சூலக்கரை அருகே தீக்குளித்துள்ளான். அவன் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் தீக்குளித்த முத்துக்குமாரின் உடல் கருகியதுபோல சரவணசுரேசின் உடல் கருகி இருக்கிறது. அவன் மனைவிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.

என்னைப்பற்றி மீம்ஸ் போடுபவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் போடும் மீம்ஸ்களால் எங்கள் குடும்பத்தினர் மன ரீதியாக நொறுங்கிப்போய் உள்ளனர். எனவே மீம்ஸ் போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் என் மகனுக்கு பங்கு உள்ளது என சிலர் தகவல் பரப்பி வருகின்றனர். இது மிகுந்த கவலை அளிக்கிறது.

தொண்டர்கள் மட்டுமே தீக்குளிக்கிறார்கள், தலைவர்களோ, தலைவர்களின் குடும்பத்தினரோ தீக்குளிக்கவில்லை என பலர் கூறி வந்த விமர்சனங்களுக்கு இது ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது.

கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட இதைத் தான் கூறினேன். இளைஞர்களே தீக்குளிக்காதீர்கள், தீக்குளிப்பது என்பது தீர்வல்ல என எடுத்துரைத்தேன். இப்போதும் அதைத் தான் கூறுகிறேன். எந்த பிரச்சினையாக இருந்தாலும், யாரும் தீக்குளிக்காதீர், உங்கள் காலில் விழுந்து மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற தவறை யாரும் செய்யாதீர்கள்.

இவ்வாறு வைகோ கூறினார்.

முன்னதாக அவர் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது கண்ணீர் விட்டு கதறி அழுதார். பேட்டி கொடுக்கும் போதும் அழுது கொண்டே பேட்டி அளித்தார்.

Related Tags :
Next Story