நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை: வீடு, கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது


நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை: வீடு, கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 14 April 2018 4:15 AM IST (Updated: 14 April 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக வீடு, கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. வாகனங்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த 2 மாதமாக கடும் வறட்சி நிலவியது. இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று பலத்த ஆலங்கட்டி மழை பெய்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் விடியவிடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

கொணவக்கரை அருகே முருங்கை கிராமத்தில் உள்ள வீடுகள் பலவற்றில் வெள்ளம் புகுந்தது. பாத்திமட்டம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்ல போடப்பட்டிருந்த மரப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அது போல் முருங்கை கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் மழைநீரில் அடித்து செல்லப்பட்டன. அவற்றை வாகன உரிமையாளர்கள் காலை நேரத்தில் தேடி கண்டுபிடித்தனர்.

கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் ரோடு பெட்டட்டி அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதன் காரணமாக மண் திட்டுகள் இடிந்து விழுந்தன. கோத்தகிரியில் நேற்று முன்தினம் மட்டும் 88 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆனால் கோத்தகிரி நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஈளாடா தடுப்பணை பகுதியில் ஒரு மில்லி மீட்டர் அளவுகூட மழை பதிவாகவில்லை.

கோத்தகிரி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குளிர்ந்த சீதோஷண நிலை நிலவுகிறது. இதனால் கோடையில் தவித்து வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மஞ்சூர், குந்தா, பிக்கட்டி, எடக்காடு, தங்காடு, கன்னேரி, பெங்கால்மட்டம், கைக்காட்டி, தேவர்சோலை, கிண்ணக்கொரை, தாய்சோலை, கோரகுந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மஞ்சூர் பஜாரில் உள்ள சஜி என்பவரது கடைக்குள் வெள்ளம் புகுந்தது. இது போல் அங்கிருந்த கடைகளிலும் மழைநீர் புகுந்தது. நேற்று காலையில் கடைக்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் கடைக்குள் தேங்கி இருந்த தண்ணீரை வாளியை கொண்டு அள்ளி வெளியேற்றினார். மழை நீர் புகுந்ததால் கடைகளில் இருந்த சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் நாசமாயின. மழை பெய்ததால் கிண்ணக்கொரை மற்றும் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் விவசாய பணிகளை தொடங்குவதற்கு வசதியாக நிலத்தை சமன்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளனர்.

குன்னூர், கொலக்கொம்பை மற்றும் சுற்றுபுற பகுதிகளில் கடந்த வாரம் இரவு வேளையில் மிதமான மழை பெய்து வந்தது. ஆனால் பகல் வேளையில் கடும் வெப்பம் நிலவியது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் இரவு சுமார் 12 மணியளவில் இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆப்பிள்பி ரோடு, உபதலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன. மேலும் குன்னூர் ஓட்டுப்பட்டரை சாலையில் மவுண்ட் பிளசெண்ட் மற்றும் ஓட்டுப்பட்டரை பிரிவில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று முன்தினம் பலத்த மழை பெய்த போது குன்னூர் ஆப்பிள் ரோடு பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. இதில், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. குன்னூர் நகராட்சி 13-வது வார்டு ஹவுசிங் யூனிட் பகுதியில் வசிக்கும் பால்ராஜ் என்பவரது வீட்டிற்குள் பாதாள சாக்கடை உடைந்து தண்ணீர் புகுந்தது. இதனால் பால்ராஜ் குடும்பத்தினர் இரவு முழுவதும் தூங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளானார்கள். குன்னூர் அருகே உள்ள சேலாஸ் சோல்ராக் செல்லும் சாலையில் வீட்டின் முன்புறம் இருந்த தடுப்புச் சுவர் இடிந்ததால் வீடு அந்தரத்தில் தொங்கி கொண்டு இருக்கிறது. இதனால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

மழை குறித்து உபாசி தேயிலை ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் டாக்டர் உதயபானு கூறுகையில், கடந்த வியாழக்கிழமை இரவு குன்னூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. கேர்பெட்டா, கோடநாடு ஆகிய இடங்களில் மழையளவு பதிவாக வில்லை என்றார். 

Next Story