தடையை மீறி நடைபெற்ற ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு வீரர்கள் அடக்கினர்


தடையை மீறி நடைபெற்ற ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு வீரர்கள் அடக்கினர்
x
தினத்தந்தி 15 April 2018 4:30 AM IST (Updated: 15 April 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழப்பள்ளம் கிராமத்தில் தடையை மீறி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழப்பள்ளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். ஆனால் போதிய பாதுகாப்பு அம்சம் இல்லை என கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தடையை மீறி நேற்று விழப்பள்ளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இதையொட்டி புனித செபஸ்்தியார் ஆலயத்தின் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஏராளமான காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் முதல் காளையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் திருச்சி, ஸ்ரீரங்கம், லால்குடி, அரியலூர், திருமானூர், புள்ளம்பாடி, கீழப்பழூர், மீன்சுருட்டி, காட்டுமன்னார்குடி, ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம், தா.பழூர், சுத்தமல்லி, கீழமிக்கேல்பட்டி, செந்துறை, இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், உடையார்பாளையம், தத்தனூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 400-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். அதில் சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் பாய்ந்து ஓடின.

காளைகள் முட்டியதில் மீன்சுருட்டி அருகே உள்ள கல்லடிக்குட்டை கிராமத்தை சேர்ந்த குமார்்்(வயது 45), பார்த்திபன் (28), பிரபுதேவன் (26), புள்ளம்பாடி முருகன் (37), ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் குவளை, அண்டா, குடங்கள் உள்ளிட்ட சில்வர் பாத்திரங்கள், குத்துவிளக்குகள், கட்டில், பீரோ, செல்போன், வெள்ளி மற்றும் தங்க காசுகள் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் ரொக்கம் ரூ. 1000 முதல் ரூ.5ஆயிரம் வரை வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை திரளான பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் விழப்பள்ளம் கிராமமக்கள் செய்திருந்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. 

Next Story