மதவாத சக்திகளுடன் எப்போதும் கூட்டணி கிடையாது டி.டி.வி.தினகரன் பேட்டி


மதவாத சக்திகளுடன் எப்போதும் கூட்டணி கிடையாது டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 15 April 2018 4:30 AM IST (Updated: 15 April 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

மதவாத சக்திகளுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

செம்பட்டு,

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மத்திய அரசு சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும். நாங்கள், பா.ஜ.க.வோடு கூட்டணி அமைக்க போவதாக கூறுவது தவறு. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்குவதற்கு முன்பே நாங்கள் தெளிவாக கூறி இருக்கிறோம். எங்கள் இயக்கம் ஜெயலலிதா வழியில் மதச்சார்பற்ற நிலையில் தான் தொடரும். மதவாத சக்திகளுடன் எப்போதும் கூட்டணி கிடையாது. எங்களுடைய வளர்ச்சியை பிடிக்காமல் யாரோ வதந்தியை கிளப்பி விட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு அரசு செயல்படுகிறதா என்று தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்தநிலையில் இவர்கள் உள்ளாட்சித் தேர்தலை எப்படி நடத்துவார்கள்?.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தான் தமிழக மக்களும், எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அனைவரும் ஒரே இலக்கை நோக்கி தான் போராடுகிறோம். அதற்காக ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்ற அவசியம் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராடியவர்கள் மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்து வருகிறது. இவர்கள் இதை தவிர வேறு என்ன செய்ய முடியும். வைக்கோல்போரில் செய்த பொம்மை போல் இந்த அரசு உள்ளது.

18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த தீர்ப்பு வரும்போது, இந்த அரசு எங்கு இருக்கிறது என்றே தெரியாமல் போய்விடும். தமிழக மக்களை நிம்மதியாக வாழவிடாமல் செய்வதே மத்திய அரசு தான். தண்ணீர் உரிமையை கூட அவர்களால் பெற்றுத்தர முடியவில்லை. அடுத்தமுறை தேர்தல் வரும்போது, பா.ஜ.க.வினருக்கு மக்கள் தக்க பதிலை தருவார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி வரை நாங்கள் காவிரி கரையோர மாவட்டங்களில் போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் திருச்சியில் இருந்து காரில் தஞ்சை புறப்பட்டு சென்றார். 

Next Story