அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: சாமி தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் அவதி


அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: சாமி தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் அவதி
x
தினத்தந்தி 15 April 2018 3:30 AM IST (Updated: 15 April 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் திருக்கார்த்திகை தினத்தன்று சென்னை, மதுரை, சேலம், நெல்லை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல இடையில் உள்ள ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில் நேற்று தமிழ்ப்புத்தாண்டையொட்டி குலதெய்வ வழிபாட்டிற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இரவில் கோவில் அடிவாரத்திலேயே தங்கி இருந்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலை, ராஜாம்பாறை, முள்ளிக்கடவு, வழுக்கு பாறை மற்றும் மலட்டாறு போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். பின்னர் நீரின் அளவு சிறிது குறைந்த பின்னர் அதிகாலையில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதித்தனர். எனினும் இடுப்பளவு தண்ணீர் ஆற்றில் சென்றதால் நீரின் வேகத்திற்கு இடையே ஆபத்தான சூழ்நிலையில் பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக கரங்களை பிடித்தபடியே கோவிலின் மறுகரைக்கு சென்றனர். திருவிழா காலங்களில் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகமாக செல்லும் போது பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் சாமி கும்பிட செல்ல முடியாத நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் இது போன்ற நேரங்களில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல ஆற்றின் குறுக்கே பாலம் அல்லது குறைந்தபட்சம் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்றும், கோவில் வளாகத்தில் ஆடை மாற்ற அறைகள், கழிப்பறை வசதிகளை செய்து தரவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story