சேலம் மத்திய சிறையில் இருந்து கிருஷ்ணகிரி கோர்ட்டுக்கு சென்று திரும்பிய கைதியிடம் கஞ்சா சிக்கியது


சேலம் மத்திய சிறையில் இருந்து கிருஷ்ணகிரி கோர்ட்டுக்கு சென்று திரும்பிய கைதியிடம் கஞ்சா சிக்கியது
x
தினத்தந்தி 15 April 2018 3:30 AM IST (Updated: 15 April 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மத்திய சிறையில் இருந்து கிருஷ்ணகிரி கோர்ட்டுக்கு சென்று திரும்பிய கைதியிடம் 35 கிராம் கஞ்சா சிக்கியது. அவர் நூதனமுறையில் கஞ்சாவை கடத்தியது தெரியவந்தது.

சேலம்,

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). வழிப்பறி வழக்கில் கைதான இவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரையும், மேலும் சில கைதிகளையும் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கிருஷ்ணகிரி ஆயுதப்படை போலீசார் அழைத்து சென்றனர். இதற்காக தனி பஸ்சில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 10 போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். கிருஷ்ணகிரியில் கைதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு அங்கிருந்து மீண்டும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர்.

அப்போது, சிறை நுழைவு வாயிலில் 16 கைதிகளையும், சிறை வார்டர்கள் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். அந்த சமயத்தில் கைதி ராஜ்குமார், கஞ்சா பொட்டலம் கடத்திக் கொண்டு வந்திருப்பதாக சக கைதி ஒருவர் வார்டர்களிடம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை வார்டர்கள் கைதி ராஜ்குமாரை சோதனை செய்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

அப்போது அவர் கஞ்சாவை ஆசனவாய் வழியாக உள்ளே தள்ளிவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து பாதுகாப்புக்கு சென்ற போலீசாரிடம், அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு சிறை அதிகாரிகள் கூறினர். ஆனால் அதற்கு போலீசார் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் சிறைத்துறை அதிகாரிகளுக்கும், பாதுகாப்புக்கு சென்ற போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், ஆயுதப்படை பஸ்சிலேயே 10 போலீசாரும் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்தனர். இரவு 11 மணிக்கு கைதி ராஜ்குமாருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை சிறை வார்டர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, வயிற்றுக்குள் கருப்பான பொருள் ஒன்று இருப்பது தெரியவந்தது.

கஞ்சா சிக்கியது

இதையடுத்து கைதிக்கு டாக்டர்கள் நவீன முறையில் சிகிச்சை மேற்கொண்டதை தொடர்ந்து ராஜ்குமாரின் ஆசனவாய் வழியாக 35 கிராம் கஞ்சா பொட்டலம் வெளியே வந்தது. பின்னர், நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறைக்கு அவரை அழைத்து சென்றனர். இதனால் இரவு முழுவதும் 10 போலீசாரும் பெரும் அவதிக்குள்ளாகினர். இதைத்தொடர்ந்து நேற்று காலை 7.45 மணிக்கு சிறை அதிகாரிகள் தரப்பில், கைதிகளுடன் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர்களுக்கு கைதிகளை ஒப்படைத்ததற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட கைதி ராஜ்குமாருக்கு கஞ்சா எப்படி கிடைத்தது? அவருக்கு யார் கொடுத்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சேலம் மத்திய சிறை அதிகாரிகள், கிருஷ்ணகிரி போலீசாருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதன்படி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story