கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த தடுப்பணை கட்ட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் வகையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று தமிழக அரசின் முதன்மை செயலாளரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமபாளையம்,
உத்தமபாளையத்தை அடுத்துள்ள ஆனைமலையன்பட்டியில் திராட்சை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்த ஆராய்ச்சி நிலையத்துக்கு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் தமிழக அரசின் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பெடி, தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆகியோர் வந்தனர்.
ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள வானிலை மையம், திராட்சை நாற்றுகள், ஆய்வகக்கூடம் மற்றும் திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் பரிசோதனை அடிப்படையில் பயிர் செய்யப்பட்டுள்ள 130 திராட்சை ரகங்களை முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார். வேர்செடிகளில் ஒட்டு கட்டுவது குறித்து விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார்.
திராட்சை ஆராய்ச்சி மையத்தில் முதன்முறையாக நவீன முறையில் ‘ஒய்’ வடிவில் பந்தல் அமைத்து திராட்சை விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, அங்கு அமைக்கப்பட்ட பந்தலை அவர் பார்வையிட்டார். இதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, ‘ஒய்’வடிவில் பந்தல் அமைத்தால் திராட்சையில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டு விளைச்சல் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, பறவைகளிடம் இருந்து திராட்சை பழங்களை பாதுகாக்கும் வகையில், பறவை வலைகள் அமைக்க ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும். ஒய் வடிவில் திராட்சை பந்தல், பாலித்தீன் போர்வை அமைக்க கூடுதல் மானியம் அளிக்க வேண்டும். ஆல்கஹால் இல்லாத ஒயின் தயாரிக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
பருவமழை பொய்த்துப்போனதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு, முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பெடி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story