தினம் ஒரு தகவல் : புத்தகம் வாசிக்க புதிய தொழில்நுட்பம்


தினம் ஒரு தகவல் : புத்தகம் வாசிக்க புதிய தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 15 April 2018 4:59 AM GMT (Updated: 2018-04-15T10:29:59+05:30)

இன்று பரவலாக எல்லோரும் கைபேசியில் இணையவசதியைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு பல பருவ இதழ்களின் விற்பனை மூன்றில் இரண்டு பங்கு குறைந்து விட்டதாகக் கணக்கீடு ஒன்று சொல்கிறது.

எத்தனை வேகமாக நாம் மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதைக் காண ஆச்சரியமாக இருக்கிறது.

இதழ்களுக்கே இந்த நிலையென்றால் பதிப்பக புத்தகங்களின் கதி எதிர்காலத்தில் என்னவாகும் நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. வாசிப்பு என்றால் அதைக் காகிதத்தில் பார்த்துப் பழகிய மக்கள், தங்களை அறியாமலேயே டிஜிட்டல் உலகத்துக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். சில வருடங்களில், டிஜிட்டல் ஊடகத்திலேயே முழுவதும் வாசிக்கும் இளம் தலைமுறையினர் வந்துவிடுவார்கள். அவர்கள், அச்சுப் புத்தகங்களை விட கைபேசியில் அல்லது வாசிப்பதற்கென்றே விற்கப்படும் இ-ரீடர் போன்ற உபகரணங்களை நோக்கிச் செல்லக் கூடும். செல்வார்கள்.

அமேசான் என்ற இணைய விற்பனை நிறுவனம் பத்து வருடங்களுக்கு முன்பு இ-ரீடரை அறிமுகம் செய்தது. ரூ. 6,000 தொடங்கி ரூ. 22,000 வரை விலை. இதில் லட்சக்கணக்கான மின்னூல்களை சேமித்துக்கொள்ளலாம். இ-ரீடரில் பின்னணி மென்மையான முட்டையோடு நிறத்தில் கண்ணைச் உறுத்தாத நிறத்தில் இருக்கும். எழுத்துகளின் அளவை மாற்றிக்கொள்ளலாம். தொடுதிரை வசதி கொண்டது. புத்தகத்தில் இருப்பதைப் போன்ற எழுத்துக்களுடன் வடிவமைக்கப்பட்டது.

இதில் புத்தகங்கள், அகராதி தவிர வேறு எந்த நிரலியும் கிடையாது. ஆகையால் தொந்தரவில்லாமல் வாசிக்க முடியும். நாம் வாசிக்கும் வேகத்தை வைத்து எவ்வளவு சதவீதம் வாசித்திருக்கிறோம், வாசித்து முடிக்க எத்தனை நாட்களாகும் என்ற தகவலையும் கொடுக்கும். ஒருமுறை மின்னேற்றம் செய்துகொண்டால் ஒருவாரம் வரைக்கும் தாங்கும். வை-பை வசதியும் உண்டு. கைபேசியிலோ கணினியிலோ தொடர்ந்து வாசிக்கும்போது கண்களுக்கு ஏற்படும் சோர்வு இந்த இ-ரீடரில் ஏற்படுவதில்லை. அதனாலேயே புத்தக வாசிப்பாளர்கள் இதனை விரும்பத் தொடங்கிவிட்டார்கள்.

தமிழ்ப் பதிப்பகங்கள் சமீப ஆண்டுகளில் புத்தகங்களை மின்னூலாகவும் வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. தற்போது, சுமார் 1,600 தமிழ் நூல்கள் இப்படி கிடைக்கின்றன. ஒரு புத்தகத்தைக் கையில் தொட்டெடுத்து வாசிக்கும் போது புத்தகத்துக்கும் அல்லது எழுத்தாளருக்கும் வாசகருக்கும் தோன்றும் நெருக்கம் என்னவோ மின்னூலில் கிடைப்பது இல்லை என்பது அச்சுப் புத்தகக் காதலர்களின் உணர்வு. ஒருவேளை அடுத்த தலைமுறைக்கு இப்படித் தோன்றாமல் போகலாம். ஆகவே, பதிப்பகங்களும் எழுத்தாளர்களும் புத்தகமாக வெளியிடும்போதே மின்னூலாகக் கொண்டுவருவதையும் கவனத்தில் கொள்வது நலம்.

Next Story